Published : 28 Jun 2014 11:12 AM
Last Updated : 28 Jun 2014 11:12 AM

அனுமதி பெறாத கருந்திரி ஆலையில் தீ: 3 பேர் பலி

விருதுநகர் அருகே அனுமதி பெறாத கருந்திரி ஆலையில் வெள்ளிக் கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதில் கட்டிடங்கள் வெடித்துச் சிதறி 3 பேர் பலியாயினர்.

விருதுநகர் மாவட்டம், ஒண்டிப்புலி நாயக்கனூர் பி.டி. காலனியில் விருதுநகர் 13-வது வார்டு கவுன்சிலர் மீனாட்சிசுந்தரம் என்பவரின் கருந்திரி ஆலை இயங்கி வருகிறது.

அதன் அருகிலேயே அய்யப்பன் என்பவரது கருந்திரி ஆலை இயங்கி வருகிறது. அருகில் உள்ள மற்றொரு கருந்திரி ஆலையில் வியாழக்கிழமை தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் அனைத்து ஆலைகளிலும் வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது.

ஆனால், அய்யப்பன் என்பவரது கருந்திரி ஆலை மட்டும் வழக்கம் போல இயங்கி உள்ளது. வெள்ளிக் கிழமை மாலை தயாரிக்கப்பட்ட கருந்திரிகளை இரும்புக் கத்தியால் சிறு துண்டுகளாக தொழிலாளர்கள் வெட்டிக் கொண்டிருந்தனர். அப்போது உராய்வு ஏற்பட்டு வெடிமருந்து வெடித்துச் சிதறியது.

இதில் அய்யப்பனின் ஆலை மட்டுமின்றி, மீனாட்சி சுந்தரத்தின் ஆலையிலும் தீ பரவியது. இதனால் கட்டிடங்கள் பயங்கர மாக வெடித்துச் சிதறின. இதில் அய்யப்பனின் ஆலையில் பணி புரிந்த கும்பகோணத்தைச் சேர்ந்த அருமைதுரை (40) சம்பவ இடத்தி லேயே உடல் கருகி இறந்தார். கட்டிடங்கள் வெடித்துச் சிதறிய தில் அருகில் விளையாடிக் கொண் டிருந்த சின்ராஜ் மகள் காளீஸ்வரி (9) மற்றும் அருகில் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த பொன்னம்மாள் (70) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

ஆலையில் வேலை செய்த சங்கரவேல் (45), துரைராஜ் (42) ஆகிய இருவரும் நூறு சதவீத தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையிலும், மேலும் 7 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோகர் தலைமையில் 3 தீயணைப்பு வாகனங்கள் ஆலையில் பரவிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன், காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

வெடிவிபத்துச் சம்பவம் குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆலைகள் அனைத்தும் அனுமதி பெறாமல் இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x