Published : 24 Jul 2021 04:33 PM
Last Updated : 24 Jul 2021 04:33 PM

பிளீச்சிங் பவுடர் சாப்பிட்டதால் மெலிந்த சிறுமி; 2 கிலோ எடை அதிகரித்து நல்ல நிலையில் உள்ளார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தடுப்பூசி செலுத்தும் பணியினை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

சென்னை

தவறுதலாக பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட சிறுமி தேறி வருவதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நியூமோகோக்கல் தடுப்பூசி செலுத்துவதை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூலை 24) ஆய்வு செய்தார்.

தவறுதலாக பிளீச்சீங் பவுடரைச் சாப்பிட்டதால் அதீத எடையிழப்பு, உணவு உண்ணமுடியாமல் போனதால், கிசிச்சை பெற்றுவரும் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமிக்குப் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டதையும், 10 வயதுச் சிறுவனுக்கு தாடையில் அதிவேகமாக வளரும் கட்டி அகற்றப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதையும், 3 வயதுச் சிறுவனுக்கு, உலகத்திலேயே நான்கு பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட பால்லோஸ் டெஸ்ட்ரோலஜி எனும் இதய நோயால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப்பட்டுள்ளதையும் பார்த்து நலம் விசாரித்தார்.

இதன்பின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"இந்தியா முழுவதிலும் உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் நிமோனியா, மூளைக் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு 12 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர். தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்நோய்க்கான தடுப்பூசியான நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் அத்தடுப்பூசி போடும் பணியினை திருவள்ளூர் மாவட்டத்தில் நானும், சுகாதாரத் துறையின் செயலாளரும் தொடங்கி வைத்தோம்.

இன்று எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் தினந்தோறும் நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசிகள் போடப்படும். தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி மூன்று தவணைகளாக ரூ.12 ஆயிரம் கட்டணத்தில் செலுத்தப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமி, கடந்த மார்ச் 16ஆம் தேதி துணிகளை வெளுப்பதற்குப் பயன்படுத்தப்படும் ரசாயன திரவமான பிளீச்சிங் பவுடரைத் தவறுதலாகச் சாப்பிட்டதால் மிக நல்ல நிலையில் இருந்த அக்குழந்தை, 6 கிலோ உடல் எடை குறைந்து மெலிந்து, திட, திரவ உணவுகளை உட்கொள்ள முடியாமல், உணவுக்குழாய் பாதிக்கப்பட்டது.

தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மூலம், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இம்மருத்துவமனையின் மருத்துவர்கள் இக்குழந்தைக்கு மிகச் சிறப்பாக அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் ஒரு துளை மூலம் உணவு செலுத்துவதற்கு சிகிச்சை அளித்து உணவு வழங்கத் தொடங்கி இருக்கின்றனர்.

மருத்துவர்களின் தீவிர முயற்சியினால் 2 கிலோ எடை அதிகரித்து, தற்போது 8 கிலோ எடையில் உள்ளார். மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலையில் அக்குழந்தையின் தாயும், தந்தையும் இருக்கின்றனர். அவர்கள் இம்மருத்துவமனை வளாகத்திலேயே தங்கியிருக்கின்றனர்.

எனவே, அவர்களுக்கு, எனக்கு அரசின் சார்பில் வழங்கியிருக்கின்ற சட்டப்பேரவை விடுதியில் தங்குவதற்கும், அவர்கள் எவ்வளவு நாட்கள் தங்கி அவர்களின் குழந்தைக்கு சிகிச்சை பெற முடியுமோ, அவ்வளவு காலத்துக்கும் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் அனைத்து விதமான வசதிகளையும் நானே வழங்குகிறேன் என்று தெரிவித்துள்ளேன். அதற்குரிய ஏற்பாடுகள் உடனே வழங்கப்பட்டுள்ளன.

மற்றொரு 10 வயதுச் சிறுவனின் தாடையில் மிகப் பெரிய அளவிலான கட்டி ஏற்பட்டு 2019-ல் ஒரு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதேபோல், இப்போது ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பேசக்கூடிய அளவுக்கு அச்சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் இன்னும் இச்சிறுவனக்குத் தேவைக்கேற்ப சிகிச்சை அளித்து வருகின்றனர். நிச்சயம் இந்தச் சிறுவன் நல்ல உடல்நலத்தோடு இல்லம் திரும்புவான் என வாழ்த்துத தெரிவித்தேன்.

அதேபோல், 3 வயதுச் சிறுவனுக்கு இருதய எக்மோ பரிசோதனை செய்ததில், அச்சிறுவனுக்கு பால்லோஸ் டெஸ்ட்ரோலஜி எனும் இதயநோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு இப்போது நலமுடன் உள்ளார். உலகத்திலேயே அரிதான இந்நோய் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர்களின் அதிதீவிர முயற்சியினால் காப்பாற்றப்பட்டுள்ளது. இக்குழந்தையின் பெற்றோரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரசு மருத்துவர்கள் மிகச் சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்தச் சேவையோடு நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி செலுத்திடும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஒன்றரை மாதத்தில் ஒரு தடுப்பூசியும், மூன்றரை மாதத்தில் ஒரு தடுப்பூசியும், ஒன்பதரை மாதத்தில் ஒரு தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. முதல் தடுப்பூசி போட்ட பிறகு குறுஞ்செய்தி வாயிலாக அடுத்தடுத்து தடுப்பூசி செலுத்தப்படும் தேதிகளும் அவர்களது செல்பேசிக்குத் தகவல் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 9,23,000 பேர் உள்ளனர். தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. 5 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதலின்படி செலுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்.

இந்தியாவில் 21 மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இத்தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த கால ஆட்சி இத்தடுப்பூசி செலுத்துவதில் மெத்தனத்தைக் காட்டியுள்ளது. தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி உடனடியாக இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எழுபது ஆயிரம் தடுப்பூசிகள் இதுவரை வரப்பெற்றுள்ளன. அவை முதல் தவணையாக தற்போது போடப்பட்டு வருகின்றன.

கடந்த கால திமுக ஆட்சியில் தசைச் சிதைவு உள்ள குழந்தைகளுக்கு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தனி மருத்துவமனை தொடங்கப்பட்டது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 2,000 குழந்தைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. சென்னையில் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 200 பேர் இருக்கின்றனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் இக்குழந்தைகளை அழைத்து வருவதற்கான வாகனத்தையும் அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். அந்த வாகனமும், மருத்துவமனையும் அப்படியே இன்னும் இருக்கிறது. நாளையோ அல்லது அதற்கு மறுநாளோ அம்மருத்துவமனையை ஆய்வு செய்ய இருக்கிறோம். அம்மருத்துவமனையின் விரிவாக்கம், தரம் உயர்த்துதல் பற்றி ஆய்வு செய்ய உள்ளோம். இன்னும் தசைச் சிதைவு உடைய குழந்தைகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கும் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும்.

'மக்களைத்தேடி மருத்துவம்' என்கிற திட்டத்தை மிக விரைவில் முதல்வரே நேரடியாக கலந்துகொண்டு தொடங்கி வைக்க இருக்கிறார்".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x