Published : 24 Jul 2021 02:57 PM
Last Updated : 24 Jul 2021 02:57 PM
தமிழகத்துக்கு சொன்னதை விட கூடுதலாக மத்திய அரசு தடுப்பூசி வழங்கியும், அரசியல் செய்கின்றனர் என, திமுக மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 24) சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தமிழ் மண்ணை சார்ந்ததுதான் பாஜக சித்தாந்தம். ஆன்மிகத்தை அடிப்படையாக வைத்து கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது. பவுர்ணமி, கார்த்திகை தீபத்துக்கு யாருமே அழைக்காமல் பல லட்சம் பேர் வருகிறார்கள். தமிழக மக்களுக்கு ஆன்மிக தேடுதல் இருக்கிறது. ஆன்மிகத்துடன் வாழ்க்கை பயணத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக கோயிலை புண்ணிய ஸ்தலமாக தமிழக மக்கள் பார்க்கின்றனர்.
கிரிவலம் செல்ல முடியவில்லை என எனக்கும் வருத்தமாக உள்ளது. கரோனா தொற்று பரவலை தடுக்க அரசு விதியை இயற்றி இருக்கும் போது, அதனை பின்பற்றுவது நம்மை போன்றவர்கள் மற்றும் சாமானிய மக்களின் கடமையாகும். தொடர்ச்சியாக கிரிவலம் செல்லும் பக்தர்கள் உள்ளனர். கிரிவலம் மீதான தடையை தமிழக அரசு விரைவில் விலக்கிக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பானது உலகிலேயே மிகப்பெரிய சேவை அமைப்பு. அந்த அமைப்புக்கு ஈடு எதுவும் கிடையாது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் 'இசட்' பாதுகாப்பில் உள்ளார். அவரின் வருகையின்போது பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்துவார்கள். சாலையில் உள்ள வேகத்தடை போன்றவற்றை தவிர்ப்பார்கள்.
மதுரை மாநகராட்சி துணை ஆணையரின் கடிதத்தில், பாதுகாப்பு காரணங்களுக்கான பணி என தெளிவாக கூறியுள்ளார். இதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதுகிறார். உடனே, அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்கிறது. அந்த அதிகாரிக்கு பணி வழங்காமல் ஓரமாக உட்கார வைத்துள்ளனர். இந்த செயலானது கண்டனத்துக்கு உரியது மட்டுமல்ல, அரசின் எண்ணங்கள் எவ்வாறு உள்ளது எனவும் பிரதிபலிக்கிறது.
இது தொடர்பாக, தலைமைச் செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு பாஜக கடிதம் எழுதி உள்ளது. எந்த தவறும் செய்யாத அதிகாரியை மீண்டும் பணிக்குக் கொண்டு வர வேண்டும்.
கரோனா காலத்தில் உணவு, ஆக்சிஜன் மற்றும் நிதி உதவி என பல சேவைகளை ஆர்எஸ்எஸ் செய்துள்ளது. அப்படிப்பட்ட அமைப்பு மீது தமிழக அரசுக்கு என்ன காழ்ப்புணர்ச்சி என தெரியவில்லை.
கரோனா தடுப்பூசி விஷயத்தில் மத்திய அரசை கண்டிக்கிறோம் என்பதில் முகாந்திரம் கிடையாது. தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கு 41 லட்சம் தடுப்பூசி கொடுக்க வேண்டும். ஆனால், 52 லட்சம் தடுப்பூசி கொடுக்கப்பட்டது. 11 லட்சம் தடுப்பூசி கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் 70 லட்சத்துக்கும் கூடுதலாகத்தான் தடுப்பூசியை மத்திய அரசு வழங்கும். தடுப்பூசி மையங்களில் திமுகவினர் சென்று, டோக்கனை பெற்று, தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு வழங்குகின்றனர். இதைக் கண்டித்துதான் அதிமுக, பாஜக ஆர்ப்பாட்டம் செய்துள்ளது.
ஜூன் மாதத்துக்கு சொன்னதை விட குறைவாக கொடுத்துள்ளனர் என, சுகாதாரத் துறை அமைச்சர் அறிக்கை வெளியிடட்டும். மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கிறது, நிறைய தடுப்பூசி வழங்குகிறது என, டெல்லியில் பேசுகிறார்கள், சென்னை வந்ததும் மாற்றி பேசுகின்றனர்.
தமிழகத்துக்கு பாரபட்சம் பார்க்கின்றனர் என கூறுகின்றனர். சொன்னதை விட மத்திய அரசு அதிகமான தடுப்பூசி வழங்கும்போது, அதனை மறைத்து ஏன் அரசியல் செய்கின்றனர்.
பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பணியை மத்திய அரசு செய்து வருகிறது. ஒரு லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்போம் என சொல்லி திமுக ஆட்சிக்கு வந்தது. அவர்கள் சொன்னது போல் குறைக்கவில்லை. சாமானிய மக்களின் வலியை தமிழக பாஜக உணர்கிறது.
பழைய அரசு மீது லஞ்ச ஒழிப்புத் துறை மூலமாக புதிய அரசு சோதனை நடத்துவது என்பது, தமிழகத்தில் வாடிக்கையாக இருப்பதுதான். அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம், அவர்கள் அரசியலுக்காக சோதனை நடத்தினார்களா என்பது தெரிந்துவிடும்.
அரசு சொல்லும் எல்லா விஷயத்தையும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. காவல்துறையினர் தனது கடமையை செய்ய வேண்டும். மனசாட்சிப்படி பணியை செய்ய வேண்டும்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து அவர், திருவண்ணாமலையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT