Published : 24 Jul 2021 03:18 PM
Last Updated : 24 Jul 2021 03:18 PM

காவல்துறை நடவடிக்கை குறித்த வழக்குகளில் இயந்திரத்தனமாகச் செயல்படக் கூடாது: மாஜிஸ்திரேட்டுகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை

காவல்துறை நடவடிக்கை எடுக்காததை எதிர்த்த வழக்குகளில் இயந்திரத்தனமாகச் செயல்படக் கூடாது என மாஜிஸ்திரேட்டுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் என்பவர், அதிக வட்டிக்குப் பணம் கடனாகக் கொடுத்து, தனது சொத்தை அபகரித்துக் கொண்டதாகக் கூறி, ஆர்த்தி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி, குற்றத்துக்கான முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், வழக்கை முடிப்பதாக இருந்தால் அதுகுறித்த அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் எனவும், திருவண்ணாமலை முதலாவது நீதித்துறை நடுவர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி விசாரணை நடத்திய போலீஸார், வழக்கை முடித்து, மனுதாரருக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர். இதையடுத்து, தனது புகார் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்த்தி தாக்கல் செய்த மனு, நீதிபதி நிர்மல்குமார் முன்பாகக் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஏற்கெனவே அச்சிட்ட படிவத்தில் காலியிடங்களை மட்டும் கையால் பூர்த்தி செய்து உத்தரவு பிறப்பித்த மாஜிஸ்திரேட்டைக் கண்டித்ததுடன், திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி அவர் தாக்கல் செய்த அறிக்கையில், பணி அழுத்தம் காரணமாக அவர் இப்படி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், வேறு எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையைத் தயக்கத்தோடு ஏற்றுக்கொள்வதாகக் கூறிய நீதிபதி நிர்மல்குமார், எதிர்காலத்தில் இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கூடாது என திருவண்ணாமலை முதலாவது நீதித்துறை நடுவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், காவல்துறைக்கு எதிரான வழக்குகளில் ஆவணங்களை ஆராய்ந்து, உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்ற உச்ச நீதிமன்ற உத்தரவுகளைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, இனிவரும் நாட்களில் இயந்திரத்தனமான உத்தரவுகளை மாஜிஸ்திரேட்டுகள் பிறப்பிக்க மாட்டார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல திருவண்ணாமலை ஆனந்தி கடந்த மே 24-ம் தேதி அளித்த புதிய புகாரை முறையாகப் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் எனக் காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x