Published : 24 Jul 2021 01:29 PM
Last Updated : 24 Jul 2021 01:29 PM

ஆபாசப் படம் பார்க்கிறாயா? அபராதம் கட்டு: டெல்லி போலீஸ் போல் நடித்து மிரட்டிப் பணம் பறித்த 3 பேர் சென்னையில் கைது 

சென்னை

ஆபாச வலைதளங்களைக் கண்காணித்து அதில் படம் பார்ப்பவர்களின் தகவலை எடுத்து போன் செய்து, டெல்லி சைபர் கிரைம் போலீஸ் என மிரட்டி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் ஆபாசப் படங்களைப் பார்ப்போர் எண்ணிக்கை எப்போதும் அதிகம் உண்டு. அவ்வாறு பார்ப்பவர்களில் உலக அளவில் இந்தியர்கள் கணிசமான பங்கை வகிக்கின்றனர். ஆபாச வலைதளங்களில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களைப் பார்ப்பதோ, பகிர்வதோ சட்டப்படி குற்றமாகும்.

இவ்வாறு சமூக வலைதளங்களில் குழந்தைகளுக்கான ஆபாசப் படங்களைப் பார்த்தோர், பகிர்ந்தோர் என ஆயிரக்கணக்கானோர் பட்டியலை இண்டர்போல் போலீஸ் இந்தியாவுக்கு அனுப்பியது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருந்ததும் தெரியவந்தது. இந்தத் தகவலால் பலரும் பயந்துபோய் தங்கள் ஐபி முகவரிகளை மாற்ற முயன்றனர்.

இந்நிலையில் இந்தப் பிரச்சினை வழக்கம்போல் மற்ற நிகழ்வுகளால் மறக்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி ஒரு கும்பல் பணம் பறிக்கத் திட்டமிட்டது. சென்னையைச் சேர்ந்த 3 நபர்கள் இத்திட்டத்தில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடிவு செய்தனர். அவர்கள் மூவரும் முதற்கட்டமாக ஆபாச வலைதளங்களை அதிகம் பார்ப்பவர்கள் பட்டியலைச் சேகரித்தனர். பெரும்பாலும் வட மாநிலத்தவராக இருந்தால் எளிதாக இருக்கும் என முடிவெடுத்து காரியத்தில் இறங்கினர்.

வடமாநிலத்தவர் குறிப்பாக டெல்லியைச் சேர்ந்தவர்களின் ஐபி முகவரி, செல்போன் எண்களைச் சேகரித்த 3 பேரும் அவ்வாறு சேகரித்த எண்களில் உள்ளவர்களை அழைத்து தாங்கள் டெல்லி போலீஸிலிருந்து பேசுவதாகக் கூறி, உங்களை விசாரிக்க வேண்டும் என மிரட்டுவர்.

என்ன விஷயம் என்று கேட்பவர்களிடம், நீங்கள் அதிக நேரம் சமூக வலைதளங்களில் ஆபாச படங்களைப் பார்த்துள்ளீர்கள். அதிலும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட படங்களைப் பார்ப்பது குற்றம் எனத் தெரிந்திருந்தும் பார்த்துள்ளீர்கள். அது சட்டப்படி குற்றம். உங்களுக்கு முதற்கட்டமாக 5000 ரூபாய் அபராதம் விதிக்கிறோம். கட்டத் தவறினால் டெல்லி போலீஸார் உங்கள் வீட்டுக்கு வந்து உங்களைக் கைது செய்வார்கள். 6 மாதத்திலிருந்து 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை. அக்கம் பக்கத்தவருக்கு, உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இந்த விஷயம் தெரியும் எப்படி வசதி எனக் கேட்டு மிரட்டுவர்.

இதை மறுமுனையில் கேட்கும் நபர் மானத்துக்கு பயந்து சார் அபராதத்தைக் கட்டி விடுகிறேன் என்று சொல்வார், உடனடியாகப் பணத்தை ஆன்லைனிலேயே கட்டச் சொல்லி பணத்தை வசூல் செய்வார்கள். பணத்தைக் கட்டியவரும் மானத்துக்கு பயந்து போலீஸ் நம்மை சில ஆயிரம் அபராதத்துடன் விட்டுவிட்டார்களே என நிம்மதிப் பெருமூச்சுடன் யாருக்கும் தகவலைச் சொல்லாமல் அமைதியாகிவிடுவார்கள்.

இவ்வாறு டெல்லி போலீஸார் போல் பேசி அவர்கள் லோகோவைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கானவர்களிடம் சுமார் 34 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்து வந்துள்ளனர். லாபகரமாகவும் மற்றவர்கள் பயத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எளிதாகவும் இருந்ததால் வசதியாக தங்கள் செயலைச் செய்து வந்துள்ளனர்.

இதுபோன்று அபராதம் கட்டியபின் சிலருக்கு சந்தேகம் வந்து டெல்லி போலீஸ்தான் அபராதத் தொகையை வசூலித்ததா என ஆராய்ந்தபோது தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்து டெல்லி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளனர். மேலும் அதிகம் புகார்கள் குவியவே மோசடிப் பேர்வழிகளைப் பிடிக்க டெல்லி போலீஸார் வலை விரித்துள்ளனர்.

ஏமாற்றப்பட்டு அபராதம் கட்டியவர்களிடம் அவர்களைத் தொடர்பு கொண்டவர்கள் போன் நம்பரை வாங்கி அதன் டிராக்கை எடுத்து சோதித்தபோது அது சென்னையில் இருப்பதாகக் காண்பித்தது. சென்னை, திருவல்லிக்கேணியில் இருந்துகொண்டு டெல்லி போலீஸ் போல் வலைதளத்தை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு பணம் கறந்து வந்ததை அறிந்துகொண்ட டெல்லி போலீஸார் உடனடியாக சென்னை போலீஸாருக்குத் தகவலை அளித்துள்ளனர்.

சென்னை, திருவல்லிக்கேணி துணை ஆணையருக்குத் தகவல் தந்துவிட்டு டெல்லி போலீஸார் சென்னை வந்துள்ளனர். திருவல்லிக்கேணி போலீஸார், டெல்லி போலீஸார் அளித்த முகவரியில் இருந்த 3 மோசடி நபர்களை நேற்றிரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து டெல்லி சைபர் கிரைம் போலீஸார் வசம் ஒப்படைக்க அவர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களை விசாரணை செய்ததில் அவர்கள் மாங்காடு, கே.கே.நகர் சுபம் நகரைச் சேர்ந்த ராம்குமார் (32), கொளத்தூர் ரெட்டேரி பகுதியைச் சேர்ந்த கேப்ரியல் ஜோசப் (37), திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியைச் சேர்ந்த தினோ சந்த் (29) எனத் தெரியவந்தது. அவர்கள் மீது ஐபிசி பிரிவு 419,420,468,471,120(v) IPC 66C/66D IT Act -ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான ஒரு தெலுங்குப்ப டத்தில் ஹைதராபாத்தில் இருந்துகொண்டு கால் சென்டர் நடத்துவதுபோல் அமெரிக்க அரசின் மிகப்பெரிய வரி வசூல் அமைப்பு (Internal Revenue Service) IRS பெயரில் அமெரிக்க மக்களிடம் வரி வசூலிப்பதுபோல் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை மோசடியாக சம்பாதிப்பதுபோல் காட்சி அமைத்திருப்பார்கள். அதேபோன்று சென்னையில் இருந்துகொண்டு டெல்லியில் உள்ள மக்களிடம் டெல்லி போலீஸ் போல் மிரட்டி இந்த கும்பல் சினிமா பாணியில் பணம் பறித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x