Published : 24 Jul 2021 11:36 AM
Last Updated : 24 Jul 2021 11:36 AM

குட்கா, மாவா, ஹான்ஸ் இல்லா சென்னை; கடும் நடவடிக்கைக்குத் தயாராகும் காவல்துறை: புதிய குழு அமைப்பு  

சென்னை

குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னையில் தடுப்பு நடவடிக்கையாகப் புதிய பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை காவல்துறை சார்பில் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, மாவா, ஹான்ஸ் போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தல், பதுக்கல், கடத்துதல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தமிழக அரசு 2013ஆம் ஆண்டு முதல் தடை செய்துள்ளது.

சென்னை காவல் ஆணையர் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணித்தும், கடைகள், கிடங்குகள் மற்றும் வீடுகளில் குட்கா, மாவா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களைக் கைது செய்து, உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

மேலும், பிற மாநிலங்களிலிருந்து குட்கா, ஹான்ஸ், ஜர்தா போன்ற புகையிலைப் பொருட்களைக் கடத்தி வருபவர்களைக் கண்டறிந்து கைது செய்து, அவர்களது வாகனங்களைப் பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகிறது. எனினும், தமிழகத்தை குட்கா, பான் மசாலா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் இல்லா மாநிலமாக மாற்றும் திட்டத்தின் முதற்கட்டமாக, சென்னையில் மேற்படி புகையிலைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் முதல் படியாக, நேற்று மாலை, வேப்பேரி காவல் ஆணையரகத்தில் சென்னை பெருநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் பி.செந்தில்குமார், ஆகியோர் தலைமையில், வியாபாரிகள் சங்கத் தலைவர்கள் வெள்ளையன், விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கலந்தாய்வில், மேற்படி புகையிலைப் பொருட்களை ஒழிப்பதற்கு, சென்னை பெருநகரக் காவல்துறையில் DAB ToP (Drive Against Banned Tobacco Products) என்ற திட்டத்தைத் தொடங்கி, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மற்றும் தனிப்படையினர் மூலம் சென்னை காவல் எல்லைகளைக் கண்காணித்து, குட்கா மற்றும் மாவா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தல், கடத்துதல், பதுக்கல் மற்றும் பயன்படுத்துதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து கைது செய்ய அறிவுறுத்தப்பட்டது.

தீவிர வாகனத் தணிக்கை மேற்கொண்டு, கடத்தலைத் தடுக்கவும் மேலும் பதுக்குதலைக் கண்டறிய காவல்துறை, உணவு பாதுகாப்புத் துறை மற்றும் சென்னை மாநகராட்சியினர் இணைந்து கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மேற்படி குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், குற்றத்தில் ஈடுபடும் வாகனங்களைப் பறிமுதல் செய்து ஏலம் விடுவதற்கு உரிய சட்ட வழிவகை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த வியாபார சங்கங்களின் பிரதிநிதிகள் சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மாவா புகையிலைப் பொருட்கள் முற்றிலும் ஒழிக்க உறுதுணையாக இருப்பதாகவும், இது தொடர்பாக ஏற்கெனவே சுற்றறிக்கைகளைத் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், மேற்படி குற்றங்களில் எவரேனும் ஈடுபடுவது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது பெருநகர சென்னை மாநகராட்சியின் உதவி மையம் 1913 மற்றும் தேசிய தேசிய அவசர கால எண் 112 என்ற 24 மணி நேரமும் இயங்கக்கூடிய எண்களுக்கோ தகவல் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் 94440 42322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தகவல் கொடுக்கும் நபர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும், மாவா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் இல்லாத சென்னையாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை கூடுதல் ஆணையாளர் கே.சி.சேரன் விஷீ மஹஜன், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் செந்தில்குமார், (வடக்கு), என்.கண்ணன் (தெற்கு), பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், காவல் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் வியாபார சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்”.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x