Last Updated : 24 Jul, 2021 10:47 AM

60  

Published : 24 Jul 2021 10:47 AM
Last Updated : 24 Jul 2021 10:47 AM

பிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சிக்கினார்

ஜார்ஜ் பொன்னையா: கோப்புப்படம்

மதுரை  

நாகர்கோவிலில் கிறிஸ்தவ கூட்டம் ஒன்றில் பிரதமர், உள்துறை அமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய வழக்கில், சொகுசு காரில் தப்பிக்க முயன்ற பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை மதுரை போலீஸார் இன்று காலை மடக்கிப் பிடித்தனர். நாகர்கோவில் போலீஸாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை என்ற இடத்தில் சில தினத்துக்கு முன்பு, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், ஜனநாயக கிறிஸ்தவ பேரவையின் உயர்மட்டக்குழு உறுப்பினரும், பாதிரியாருமான ஜார்ஜ் பொன்னையா என்பவர் பேசினார்.

அவர் பேசும்போது, "பக்தர்களும், இந்துக்களும் உங்களை ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைக்கவில்லை. திமுக ஜெயித்தது கிறிஸ்தவ மக்களும், முஸ்லிம் மக்களும் உங்களுக்கு போட்ட பிச்சை. இதை மறந்து விடாதீர்கள். உங்கள் திறமையை வைத்து நீங்கள் ஓட்டு வாங்கவில்லை.

நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில், சுரேஷ் ராஜனிடம் (திமுக மாவட்ட செயலாளர் - கன்னியாகுமரி) கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று சந்தித்து நாங்கள் ஓட்டு கேட்கிறோம் என்று கூறினோம். அவரோ, வேண்டாம் ஃபாதர். ஒருவேளை இதனால் இந்துக்களின் ஓட்டு கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று மறுத்து கேட்டார். இதனால் எம்.ஆர்.காந்தி (பாஜக) நாகர்கோவிலில் ஜெயித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், நாங்கள் மெஜாரிட்டி 42 சதவீதத்தில் இருந்தோம். இப்போது அது 62 சதவீதத்தைத் தாண்டிவிட்டது. விரைவில் அது 70 சதவீதத்தைத் தொட்டு விடும். நாங்கள் வளர்ந்து கொண்டு தான் இருப்போம். உங்களால் அதைத் தடுக்க முடியாது" என பேசியிருக்கிறார்.

இது தவிர, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாரத மாதா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பிரதமர், உள்துறை அமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் விதமாகவும், இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையிலும் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும், மத கலவரத்தைத் தூண்டும் விதமாகவும் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் சட்டப்பூர்வமான வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என, பல்வேறு புகார்கள் எழுந்தன. மதுரையில் இந்து மக்கள் கட்சி சார்பிலும் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட பாதிரியார் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, வாட்ஸ் அப் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இருப்பினும், நாகர்கோவில் போலீஸார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடினர்.

இந்நிலையில், சொகுசு கார் ஒன்றில் அவர், மதுரை வழியாக வெளிமாநிலத்துக்கு தப்பிச் செல்வதாக, நாகர்கோவில் போலீஸாருக்கு இன்று (ஜூலை 24) காலை தகவல் கிடைத்தது. இது பற்றி, மதுரை மாவட்ட போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

மதுரை காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினார். காலை 8 மணிக்கு மதுரை ஒத்தக்கடை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாரிடம் ஜார்ஜ் பொன்னையா சொகுசு காருடன் சிக்கினார். அவரை நாகர்கோவில் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்குப் பின், அவர் கைது செய்யப்படுவார் என, போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x