Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில், பிறந்து ஒன்றரை மாதம், மூன்றரைமாதம் மற்றும் 9 மாதம் ஆன குழந்தைகளுக்கு நியுமோகோக்கல் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.
பிறந்த சில மாதங்களே ஆன குழந்தைகளை நிமோனியா, மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்கள் தாக்குகின்றன. இந்த நோய்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க நியுமோகோக்கல் தடுப்பூசி போடப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்புட்குழி அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் இந்த தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் முன்னிலை வகித்தார்.
இந்த முகாமுக்குப் பின், மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி செய்தியாளர்களிடம் கூறியது: அதிகம் பாதிப்படையச் செய்யும் நிமோனியா, மூளைக் காய்ச்சல் ஆகியநோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக நியுமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி, தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் போடப்படுகிறது.
இந்த தடுப்பூசியை, குழந்தை பிறந்து ஒன்றரை மாதம், மூன்றரைமாதம் மற்றும் ஊக்கத் தவணையாக 9 மாதங்களில் அளிக்கலாம்.மூன்று தவணை நியுமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசியின் விலை ரூ.12 ஆயிரம். தமிழக அரசு இதை இலவசமாக வழங்குகிறது.
நியுமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி திட்டத்தின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15,864 குழந்தைகள் பயனடைய உள்ளனர். ஆகவே பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி, தங்கள் குழந்தைகளுக்கு நியுமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மருத்துவர் பழனி, வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி மற்றும் மருத்துவ அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT