Published : 24 Jul 2021 03:14 AM
Last Updated : 24 Jul 2021 03:14 AM
காரில் ‘லிப்ட்’ கொடுப்பதுபோல் நடித்து இரண்டு பெண்களிடம் 10 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற ஓட்டுநர் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் முருகரெட்டி தெருவைச் சேர்ந்த சரவணன் மனைவி சுஜாதா (45). இவருடைய உறவினரான மூர்த்தியின் மனைவி சிவபூஷனம் (67). இவர்கள் இருவரும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் குடியாத்தம் போஸ்பேட்டையில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு செல்ல சோளிங்கர் பேருந்து நிலை யத்தில் நேற்று காலை சென்றனர்.
பேருந்துக்காக காத்திருந்த போது அங்கு வந்த சிவப்பு நிற காரில் இருந்த நபர் ஒருவர் அவர்களிடம் ‘எங்கு செல்கிறீர்கள்’ என கேட்டுள்ளார். அப்போது, குடி யாத்தம் செல்வதாக கூறியதால் கார் ஓட்டுநர், ‘நானும் குடியாத்தம் செல்கிறேன். காரில் ஏறுங்கள்’ என கூறியுள்ளார். இதை நம்பிய இருவரும் காரில் ஏறியுள்ளனர்.
அந்த கார் சோளிங்கரில் இருந்து வாலாஜா, வேலூர் வழியாக குடியாத்தம் நோக்கி சென்றது. பள்ளிகொண்டா சுங்கச் சாவடி அருகே சென்றதும் காரை மெதுவாக ஓட்டிய ஓட்டுநர், திடீரென மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பி வேலூர் நோக்கி காரை அதிக வேகத்தில் ஓட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சுஜாதா, சிவபூஷனம் கூச்ச லிட்டாலும் கண்டுகொள்ளாத ஓட்டுநர் மின்னல் வேகத்தில் வேலூருக்கு வந்தார். வழியில் சிவபூஷனத்தை மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, வளையல்களை பறித்ததாக கூறப்படுகிறது. மேலும், சுஜாதா அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்றுள்ளார். ஆனால், அவர் ஓட்டுநருக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்ததால் நகைகளை பறிக்க முடியவில்லை.
அதற்குள் அந்த கார் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மேம்பாலத்தின் மீது சென்றது. சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் அருகே சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் இடத்தில் கார் மெதுவாக சென்றபோது காரின் கதவை திறந்து சுஜாதா வெளியே குதித்துள்ளார். இதைப் பார்த்த கார் ஓட்டுநர் காரில் இருந்த சிவ பூஷனத்தை வெளியே தள்ளிவிட்டு காரை வேகமாக ஓட்டிச் சென்றார்.
காரில் இருந்து இரண்டு பெண்கள் கீழே விழுவதைப்பார்த்த வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டனர். அதேநேரம், அங்கிருந்த போக்குவரத்து காவல் துறையினர் காரை விரட்டிப் பிடிக்க முயன்றனர். அதற்குள், அந்த கார் வேகமாக சென்றுவிட்டது. தகவலின்பேரில் விரைந்து சென்ற சத்துவாச்சாரி காவல் துறையினர் காரில் பெண்களுக்கு ‘லிப்ட்’ கொடுப்பதுபோல் உதவி செய்து சுமார் 10 பவுன் தங்க நகைகளை பறித்து சென்ற கார் ஓட்டுநர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT