Last Updated : 23 Jul, 2021 06:47 PM

8  

Published : 23 Jul 2021 06:47 PM
Last Updated : 23 Jul 2021 06:47 PM

இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பே தீர்வு: பாமக வழக்கறிஞர் கே.பாலு பேட்டி

வழக்கறிஞர் கே.பாலு: கோப்புப்படம்

இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புதான் எனவும், அதை மத்திய அரசு நடத்தாவிட்டால், தமிழக அரசே நடத்த வேண்டும் என்றும், பாமக வழக்கறிஞர் கே.பாலு கூறியிருக்கிறார்.

வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக எம்பிசி பட்டியலில் உள்ள 115 சாதிகள் ஒன்று திரண்டுள்ள நேரத்தில், பாமகவின் செய்தித் தொடர்பாளர் கே.பாலுவிடம் 'இந்து தமிழ்' இணைய தளம் சார்பில் உரையாடினேன்.

அதிமுக ஆட்சியின் இறுதிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட வன்னியர்களுக்கான 10.5 தனி இட ஒதுக்கீட்டு சட்டத்தை உறுதிப்படுத்த என்ன மாதிரியான முயற்சிகளை மேற்கொள்கிறது பாமக?

10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டு சட்டத்தைப் பொறுத்தரையில் முறையாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டாலும்கூட, அதற்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

எனவே, இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. இந்த ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் ஜி.கே.மணி மூலமாக முதல்வரிடம் ஒரு கடிதத்தை கொடுத்தனுப்பினார்.

அதன் பிறகு, சட்டப்பேரவையிலும் எங்கள் கட்சித் தலைவர் வலியுறுத்தியபோதும் கூட, இதுகுறித்து, அதிகாரிகளிடம் கலந்து பேசி ஒரு நல்ல முடிவை உங்களுக்குத் தெரிவிப்போம் என்று முதல்வர் உறுதியளித்துள்ளார். தமிழக அரசு ஒரு நல்ல முடிவெடுக்கும் என்று நம்புகிறோம்.

கல்லூரி மாணவர் சேர்க்கை, மருத்துவ மாணவர் சேர்க்கை, அரசுப் பணி நியமனங்கள் தொடர்பான அறிவிப்புகள் எல்லாம் வருவதால், அரசு இந்த ஒதுக்கீட்டை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும், நடைமுறைப்படுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

எம்பிசி பட்டியலில் உள்ள பல்வேறு சாதிகள் சார்பில், வன்னியர் தனி ஒதுக்கீட்டுக்கு எதிராக 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவ்வளவு வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, இதனை அமல்படுத்தும்படி அரசை வற்புறுத்துவது சரியா?

தமிழகத்தில் நடைமுறையில் இருக்கிற 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு கூடத்தான் இன்னமும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அருந்ததியர் தனி இட ஒதுக்கீடுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, முஸ்லிம்கள் தனி ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு போன்றவையும் இன்னும் நிலுவையில் இருக்கின்றன.

ஆக, வழக்கு நிலுவையில் இருப்பதோ, வழக்கு எண்ணிக்கை ஒன்றா, இரண்டா, பத்தா என்பதோ பிரச்சினையல்ல. வன்னியர் தனி ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, இந்தச் சட்டத்தை முழுமையாகப் படித்துவிட்டேன். அதில் 'புரொசிஜர் இர்ரெகுலாரிட்டி' எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார்.

'வேலிடிட்டி ஆஃப் ஆக்ட்' இறுதி விசாரணையில்தான் தீர்வு செய்யப்படும் என்றும், இடைக்கால உத்தரவு வழங்கப்படுவதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. எனவே, சட்டத்தை நடைமுறைப்படுத்தச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

இந்த ஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ள 115 சாதிகளின் கூட்டமைப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டு அதன்படிதான் ஒதுக்கீடு தர வேண்டும் என்று கூறியிருக்கிறது. உங்கள் கட்சியும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறது. ஆனால், மத்திய அரசோ இப்போதைக்கு ஓபிசி பிரிவினருக்கான கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று சொல்லிவிட்டதே?

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என்று மத்திய அரசு சொல்லியிருப்பது, சமூக நீதிக் கோட்பாட்டுக்கே எதிரானது. 1951-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தியபோது, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மட்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் போதுமானது என்று அன்றைய பிரதமர் நேரு சொன்னதற்கு காரணம் இருந்தது.

அப்போது எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மட்டுமே இட ஒதுக்கீட்டு உரிமையை, சலுகையை அனுபவித்தார்கள். எனவே, அன்றைய தேதியில் அந்த முடிவு சரி. ஆனால், இப்போது அப்படியா இருக்கிறது? எஸ்.சி., எஸ்.டி பிரிவு, ஓபிசி பிரிவு மட்டுமின்றி உயர் வகுப்பினரும் கூட 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறார்கள்.

நேரு சொன்னபடி இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்கு மட்டும்தான் சாதிவாரி கணக்கெடுப்பு என்று வைத்துக்கொண்டாலும் கூட இன்று இந்தியாவில் எல்லா சாதிகளையுமே கணக்கெடுத்துத்தானே ஆக வேண்டும்? ஓபிசி பிரிவினருக்காவது மண்டல் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் ஒதுக்கீடு கிடைத்தது.

அதுவும் இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 51 சதவிகிதம் இருக்கிறார்கள் என்று அந்த கமிட்டி பரிந்துரைத்தபோதும், ஏற்கெனவே எஸ்.சி., எஸ்.டி. ஒதுக்கீடு 22.5 சதவிகிதம் இருப்பதால், மொத்த இட ஒதுக்கீடு வரம்பு 50 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது என்று கூறி வெறும் 27 சதவிகிதம் மட்டுமே கொடுத்தார்கள்.

ஆனால், இ.டபிள்யு.எஸ். பிரிவினருக்கு எந்த அடிப்படையில் 10 சதவிகிதம் ஒதுக்கீடு கொடுத்தார்கள்? இந்தியாவில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்போர் மட்டுமே 10 சதவிகிதம் இருக்கிறார்கள் என்பதற்கு என்ன புள்ளிவிவரம் இருக்கிறது?

எனவே, மத்திய அரசு கட்டாயம் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியே ஆக வேண்டும். பெரியார் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைத் தானே வலியுறுத்தினார்? எந்தெந்த சமூகத்தினர் எவ்வளவு பேர் இருக்கிறார்களோ, அவர்களுக்குரிய இடங்களை அவரவருக்குப் பிரித்துக்கொடுங்கள் என்பதுதானே சமூக நீதி?

அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, 300-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களிடம் கையெழுத்து வாங்கி அன்றைய உள்துறை அமைச்சரிடம் வழங்கினார். 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரியாகவும் கணக்கெடுக்க வேண்டும் என்று பாமக சார்பில் வழக்கும் போட்டோம்.

ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்தப் பணிகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டதால், 2001 கணக்கெடுப்பில் சாதி விவரங்களைச் சேகரிக்க முடியாது என்று மத்திய அரசு சொல்லிவிட்டது. இப்போது 2021. இம்முறையும் மத்திய அரசு நழுவக் கூடாது. இந்தியாவில் இட ஒதுக்கீட்டு முறை அடுத்த கட்டத்தை எட்டுவதற்கான காலம் கனிந்துவிட்டதாகவே பாமக கருதுகிறது.

மத்திய அரசை ஏன் வலியுறுத்த வேண்டும்? தேர்தல் நெருக்கத்தில், தமிழகத்தில் சாதிவாரியான புள்ளிவிவரங்களைச் சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் தனி ஆணையம் அமைத்தாரே எடப்பாடி பழனிசாமி, அந்த ஆணையத்தால் எந்தப் பலனும் இல்லையா?

அந்த ஆணையம் அமைக்கப்பட்டபோது, அதற்கென ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்புகள், நியமிக்கப்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள், நிதி ஒதுக்கீடு எல்லாவற்றையும் பார்க்கும்போது அது சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆணையமாகத் தெரியவில்லை. தரவுகளைச் சேகரிக்கும் ஆணையமாகத்தான் இருக்கிறது.

ஏற்கெனவே ஜனார்த்தனன் கமிஷன், அம்பாசங்கர் கமிஷன் செய்ததுபோன்ற தரவுகளைச் சேகரிக்கும் ஆணையமாக இது இருக்கிறதே ஒழிய, முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அதாவது, இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த தமிழக மருத்துவர்கள் எத்தனை பேர், அதில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி., ஓ.சி. எவ்வளவு பேர், இதேபோல ஐஏஎஸ், குரூப்-1 அதிகாரிகள், நீதிபதிகள், இன்ஸ்பெக்டர்களில் சாதிவாரி பிரதிநிதித்துவம் என்ன என்று தரவுகளைச் சேகரிப்பதுதான் குலசேகரன் ஆணையத்தின் பணியாக இருக்கிறது.

வீடு வீடாகப் போய் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றால், அதற்கு மிகப்பெரிய அளவில் ஊழியர்களும், நிதி ஒதுக்கீடும் தேவை. ஏற்கெனவே நான் சொன்னபடி 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடங்கி பல்வேறு இட ஒதுக்கீட்டு சட்டங்களும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.

அந்த ஒதுக்கீடுகளை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த (ஜஸ்டிஃபை செய்ய) வேண்டும் என்றால், வீடு வீடாகப் போய்த்தான் கணக்கெடுப்போம் என்று தமிழக அரசே கொள்கை முடிவெடுக்க வேண்டும்.

115 சாதிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ள போராட்டம் குறித்து?

இதுபற்றி இப்போது பேச வேண்டாம் என்பது எனது நிலைப்பாடு.

விவசாயத்துக்கென தனி பட்ஜெட், மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களையும் நியமித்தல் என்று பாமகவின் சிறிய, பெரிய கோரிக்கைகளை எல்லாம் திமுக அரசு நிறைவேற்றுகிறது. இது உங்களுக்குள் ஏற்பட்டுள்ள இணக்கத்தைக் காட்டுகிறதா? அல்லது உள்ளாட்சித் தேர்தல் கணக்கா?

சின்ன கோரிக்கை, பெரிய கோரிக்கை என்றெல்லாம் இல்லை. பாமக எழுப்புகிற நியாயமான கோரிக்கைகளை, நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பது மாதிரியான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றுகிறது. சமீபத்தில் கூட மேகதாது பிரச்சினைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று சொன்னோம், கூட்டினார்கள்.

தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நல்ல அதிகாரிகளை நியமித்ததால் நாங்கள் பாராட்டினோம். அதே நேரத்தில், திண்டுக்கல் லியோனியைப் பாடநூல் கழகத் தலைவராக நியமித்ததை விமர்சித்தோம். ஆனால், அரசு அந்த முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. எனவே, இதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை.

இன்னொரு கட்சியில் கூட வன்னியருக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்றால் சுட்டிக்காட்டுவது பாமகவின் வழக்கம். தமிழக அமைச்சரவையில் துரைமுருகனுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லையே என்ற ஆதங்கம் பாமகவுக்கு இல்லையா?

யாருக்கு என்ன பொறுப்பைக் கொடுப்பது என்பதை திமுகதான் முடிவு செய்ய வேண்டும் என்றாலும், இன்னும் முக்கியமான அமைச்சர் பதவியை வன்னியர்களுக்குக் கொடுத்திருக்கலாம் என்ற கருத்து அச்சமூக மக்களிடம் பரவலாக இருக்கிறது.

துரைமுருகனுக்கு துணை முதல்வர் பொறுப்பே கொடுத்திருக்கலாம் என்று அன்புமணி கூட ஒருமுறை சொன்னார். ஒரு சந்தோஷம் என்னவென்றால், தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்போவது வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்தான். அந்த உரிமையை அவருக்குப் பெற்றுக்கொடுத்திருப்பது ராமதாஸ்தான். அதை அவர் நன்றியோடு நினைத்துப் பார்ப்பார் என்று நம்புகிறேன்.

கொங்கு நாடு பிரச்சினையில் பாமக எந்தக் கருத்துமே சொல்லவில்லையே. அதை பாமக உள்ளூர ரசிக்கிறதா?

பெரிய மாநிலங்களைச் சிறு சிறு மாநிலங்களாகப் பிரிப்பது நிர்வாக வசதிக்கும், பின்தங்கிய பகுதிகளின் முன்னேற்றத்துக்கும், சீரான வளர்ச்சிக்கும் உதவும் என்பது பாமகவின் நிலைப்பாடு. ஆனால், கொங்கு நாடு கோரிக்கையை அந்தப் பகுதி மக்களோ, இயக்கமோ, அமைப்புகளோ எழுப்பவில்லை. அது வெறும் வதந்தி என்பதால் நாங்கள் கருத்து சொல்லவில்லை.

இவ்வாறு பாமக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x