Published : 23 Jul 2021 04:39 PM
Last Updated : 23 Jul 2021 04:39 PM
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்புக்கு மேலும் கால நீட்டிப்பு வழங்கக் கூடாது, சொந்த மக்களையே உளவு பார்க்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்குக் கண்டனம், கியூபா மீதான பொருளாதாரத் தடையை விலக்கிடுக ஆகிய மூன்று தீர்மானங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் ஜூலை 23 (இன்று), 24, 25 ஆகிய தேதிகளில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ.வாசுகி, பி.சம்பத் மற்றும் மாநிலச் செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல் நாளான இன்று நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
"தீர்மானம் - 1:
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்புக்கு மேலும் கால நீட்டிப்பு வழங்கக் கூடாது!
தமிழகத்தில் கரோனா நோய்ப் பரவல் உச்சத்தில் இருந்தபோது, நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ ஆக்சிஜனுக்குக் கடுமையான பற்றாக்குறை இருந்தது. அந்த நேரத்தில், ஸ்டெர்லைட் போட்ட மனுவின் மீது உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் கருத்தைக் கேட்டது.
அதற்காக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், சிகிச்சைக்குத் தேவையான அளவில் கூடுதலான ஆக்சிஜனைத் தயாரிப்பதற்காக மட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்குத் தற்காலிக அனுமதி வழங்கலாம் என்று அரசுத் தரப்பில் ஆலோசனை வைக்கப்பட்டது.
ஸ்டெர்லைட்டின் கடந்த கால மோசமான நடவடிக்கைகள், போராடிய மக்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு போன்றவற்றையும் நினைவுபடுத்தி, அதே சமயம் கரோனா பேரிடரின் பின்னணியில் ஒட்டுமொத்த தமிழக நலனைக் கணக்கில் எடுத்து, அரசின் ஆலோசனைக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது. அதன்படி, ஜூலை 31 வரையிலான காலத்துக்கு ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் தற்காலிகமாக அனுமதி அளிக்கப்பட்டது.
அன்றைய நிலையில் தமிழகத்தில் மொத்தம் 230 மெட்ரிக் டன் என்ற அளவில் ஆக்சிஜன் உற்பத்தி இருந்தது. அதற்கு பிறகு உற்பத்தி படிப்படியாக உயர்த்தப்பட்டு தமிழகத்தில் ஆக்சிஜன் தயாரிப்பின் அளவு 650 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் போதுமான அளவில் இப்போது கையிருப்பில் உள்ளதாக அண்மையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் தெரிவித்திருக்கிறார்.
எனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு ஜூலை 31 வரையிலும் வழங்கப்பட்ட தற்காலிக அனுமதியை மேலும் காலநீட்டிப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும், அதற்கு பிறகு அத்தொழிற்சாலையில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது எனவும், ஆலையைப் பூட்டி சீல் வைக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் - 2:
சொந்த மக்களையே உளவு பார்க்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம்!
இந்தியா முழுவதும் உள்ள ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உட்பட சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்களின் கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் நீண்ட நாட்களாக ரகசியமாகக் கண்காணிக்கப்படுவதாகவும், உரையாடல்கள் உட்பட அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படுவதாகவும் அண்மையில் வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஓ எனும் அமைப்பு தயாரித்துள்ள பெகாசஸ் எனும் உளவு மென்பொருள் மூலம் இத்தகைய கண்காணிப்பு மற்றும் தகவல் திருட்டு நடைபெற்றுள்ளதாகவும், மத்திய அரசின் ஒப்புதலோடுதான் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அனைத்துத் தரப்பினராலும் வலுவான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, இத்தகைய உளவு நடவடிக்கைகளில் தங்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும், அரசின் சார்பிலோ, அரசாங்க உளவு அமைப்புகளின் சார்பிலோ யாரையும் கண்காணிக்கவில்லை எனவும் கூறியுள்ளது.
ஆனால், இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ எனும் அமைப்பு தாங்கள் தயாரித்துள்ள பெகாசஸ் எனும் உளவுச் செயலியை அரசாங்கங்களைத் தவிர வேறு எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் அளிப்பதில்லை என்பது அந்நிறுவனத்தில் கொள்கை முடிவு எனவும், உலகில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் அரசாங்கங்களுக்குத் தங்கள் உளவு மென்பொருளை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.
உளவு மென்பொருளை வழங்கும் நிறுவனத்தின் இத்தகைய விளக்கம் மத்திய அரசின் விளக்கத்துக்கு முற்றிலும் முரணாக இருப்பதால், உளவு நடவடிக்கைகளில் அரசுக்குத் தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள் என, அனைத்துத் தரப்பினரின் நடவடிக்கைகள் ரகசியமாகக் கண்காணிக்கப்படுவதோடு, அவர்களின் ஆவணங்கள் அனைத்தும் சட்டவிரோதமாகக் களவாடப்படுவதாகவும் எழுந்துள்ள முக்கியக் குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசு அலட்சியமாக நடந்துகொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
ஏனெனில் ஏற்கெனவே இத்தகைய ஒரு உளவு மென்பொருள் மூலம் அனுப்பட்ட ஆதாரமற்ற கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் ஆகியவற்றைக் கொண்டே பீமா கோரேகான் வழக்கில் முக்கிய சமூகச் செயற்பாட்டாளர்களும், எழுத்தாளர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே, பெகாசஸ் உளவு குறித்த தகவல்களை மக்களிடம் இருந்து மறைக்கும் மத்திய அரசின் செயல் மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்று என்பதோடு, அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து மக்கள் ஒன்றிணைந்து வலுவாகப் போராடுகிற சூழ்நிலை உருவாகும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கிறது.
கருத்துரிமையின் மீது பாஜக அரசு தொடுக்கும் தாக்குதல்களின் உச்சகட்ட வெளிப்பாடு இது என்பதையும் சுட்டிக்காட்டி, பாஜகவின் இந்த ஒட்டுமொத்த அரசியல் நிகழ்ச்சி நிரலை எதிர்கொள்வதற்கு அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்ற அறைகூவலையும் விடுக்கிறது.
மேலும், இப்பிரச்சினை குறித்து விசாரிப்பதற்கு உடனடியாக நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைத்து விசாரணை நடத்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் - 3:
கியூபா மீதான பொருளாதாரத் தடையை விலக்கிடுக!
சோஷலிச நாடான கியூபாவின் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. உலக நாடுகள் கியூபாவுடன் சுதந்திரமான வர்த்தகத்தை மேற்கொள்ளத் தடை, மிக மோசமான ஹெல்ம்ஸ் - பர்ட்டன் சட்டம் ஆகியவற்றை அமலாக்கி தொடர்ச்சியாக கியூபாவை வஞ்சித்து வரும் அமெரிக்கா, டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டின் அதிபராக இருந்த நேரத்தில் மேலும் கூடுதலாக 243 தடைகளையும் விதித்தது.
அமெரிக்காவின் இத்தகைய மனிதநேயமற்ற அராஜக நடவடிக்கைகள் வெறுமனே பொருளாதாரத் தடைகள் என்பதை விடவும், உன்னதமான சோஷலிச சித்தாந்தத்தின் மீதான ஏகாதிபத்தியத்தின் அருவருப்பான தாக்குதல்தான் என்பது தெளிவு. பொருளாதாரச் சிரமங்களை ஏற்படுத்தி சோஷலிச அரசின் மீது அதிருப்தியை உருவாக்கி, அதனைக் கவிழ்க்க வேண்டும் என்பது 1960இலிருந்து அமெரிக்க அரசின் கொள்கை.
இந்நிலையில், கியூபா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் திரும்பப் பெற வேண்டுமென அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 184 நாடுகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. ஆனாலும், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்துள்ளது.
ஒருபுறம் பொருளாதாரத் தடையை விதிக்கும் அமெரிக்கா, மறுபுறத்தில் தங்கள் ஆதரவாளர்களைக் கொண்ட கலகங்களை அமெரிக்காவின் மியாமி, புளோரிடா பகுதிகளிலும், கியூபாவிலும் நடத்த தொடர்ச்சியான முயற்சியை எடுத்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற அத்தகையதொரு முயற்சியையும் கோடிக்கணக்கான கியூப மக்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
பொருளாதார மற்றும் வர்த்தகத் தடைகளின் மூலமாகவும், உள்நாட்டுக் கலகங்களைத் தூண்டி விடுவதன் மூலமாகவும் கியூபாவை வீழ்த்தி விடலாம் எனும் அமெரிக்காவின் நடவடிக்கைகளைக் கண்டிப்பதோடு, கியூபா மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தடைகளையும் முழுமையாக விலக்க வேண்டுமெனும் கோரிக்கையை முன்வைத்தும் சகோதர ஆதரவு இயக்கத்தை வலுவாக நடத்திட வேண்டுமென அனைத்து ஜனநாயக அமைப்புகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
இந்திய அரசும், கியூபாவுக்கு அரசியல் ரீதியாக ஆதரவு அளிப்பதோடு, அந்நாட்டுக்குத் தேவையான உதவிகளையும் அளிக்க முன்வர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது".
இவ்வாறு மார்க்சிஸ்ட் மாநிலக் குழுக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT