Published : 23 Jul 2021 03:25 PM
Last Updated : 23 Jul 2021 03:25 PM

கோயில் யானைகள் பராமரிப்பு: அறிக்கை அளிக்க வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

கோயில் யானைகள் பராமரிப்பு தொடர்பாக மாவட்டக் குழுக்கள் அமைப்பது குறித்தும், கோயில்களில் உள்ள கால்நடைகள் பராமரிப்பு குறித்தும் அறிக்கை அளிக்க தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி என்ற இரு யானைகளையும் பராமரிப்பது தொடர்பாகவும், பாகன்கள் நியமிப்பது தொடர்பாகவும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வளர்ப்பு யானைகள் பராமரிப்புச் சட்ட விதிகள்படி, கோயில் யானைகள் பராமரிக்கப்படுகிறா என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறையும், வனத்துறையும் இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சட்டப்படி மாவட்டக் குழுக்கள் அமைக்கப்படவில்லை எனவும், கோயில் யானைகளுக்குப் பாகன்கள் இல்லை எனவும், கோயில்களில் உள்ள கால்நடைகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை இரு வாரங்களுக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், கோயில் யானைகள் பராமரிப்பு தொடர்பாக மாவட்டக் குழுக்கள் அமைப்பது குறித்தும், கால்நடைகள் பராமரிப்பு குறித்தும் அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x