Last Updated : 23 Jul, 2021 11:07 AM

2  

Published : 23 Jul 2021 11:07 AM
Last Updated : 23 Jul 2021 11:07 AM

புதுச்சேரி வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி பெற அடுத்த வாரம் அமைச்சர், எம்எல்ஏக்கள் டெல்லி பயணம்: அமைச்சர் நமச்சிவாயம் தகவல்  

அமைச்சர் நமச்சிவாயம்: கோப்புப்படம்

புதுச்சேரி

புதுச்சேரி வளர்ச்சி திட்டங்களுக்கான ஒப்புதல், நிதி பெறுவதற்காக அடுத்த வாரம் அமைச்சர், சபாநாயகர், எம்எல்ஏக்கள் டெல்லி செல்லவுள்ளோம் என்று, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று மாலை (ஜூலை 22) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"இலவச அரிசி திட்டம் தொடர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல், ரேஷன் கடைகளைத் திறந்து, ரேஷன் கடைகள் மூலம் அரிசியை மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைளை டெல்லி சென்று அமைச்சர் சாய்சரவணகுமார் முன்வைத்துள்ளார்.

ஊரக வளர்ச்சியின் மூலமாகப் பல்வேறு விதமான மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்களை உருவாக்குவதன் மூலம் கிராமப்புறத்தில் இருக்கின்ற மக்கள் அவற்றைப் பயன்படுத்தி, பொருளாதாரத்தில் முன்னேறிச் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அத்தகைய திட்டங்களுக்குப் புதுச்சேரி மாநிலத்தில் செயல்படுத்துவதற்கான நிதி ஒப்புதலை அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்களிடம் நேரடியாகச் சென்று வலியுறுத்தியுள்ளார்.

சிறுபான்மை மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்தவும், அதற்கென்று தனித்துறையை அமைக்க வேண்டும் என்று அம்மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்தத் துறைக்கென்று தனியாக ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து, அத்துறைக்குத் தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து கேட்டுப்பெற்று சிறுபான்மை மக்களுக்குக்குரிய திட்டங்களை உருவாக்கும் முயற்சியையும் எடுத்துள்ளார்.

அடுத்த வாரம் நானும், அமைச்சர் சாய்சரவணகுமார், சபாநாயகர், எம்எல்ஏக்கள் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களைச் சந்தித்து, புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான திட்டங்களைக் கொண்டு வருவதற்கு ஒப்புதல் பெற்று, அதற்கான நிதியையும் பெற்று வருவோம். மாநிலத்தின் வளர்ச்சி, மக்களின் வளர்ச்சிக்காக இணைந்து பாடுபடுவோம். என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி சுமுகமாக இருக்கிறது".

இவ்வாறு நமச்சிவாயம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x