Published : 23 Jul 2021 07:12 AM
Last Updated : 23 Jul 2021 07:12 AM
திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் பாலம், பாதாள சாக்கடை உட்பட பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் தொடர்பான பணிகள், பல ஆண்டுகளாக தேக்கமடைந்திருப்பதாக புகார் எழுந்துள்ளதுடன், பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியம் குமரன் காலனி கிளைச் செயலாளர் கே.ராஜாமணி தலைமையில் அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள், 1-வது மண்டல உதவி ஆணையர் சுப்பிரமணியத்திடம் அளித்த மனுவில், "திருப்பூர் மாநகராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட தியாகி குமரன் காலனி,விஜயாபுரி கார்டன், கூத்தம்பாளையம், ஒட்டப்பாளையம், அன்னையம்பாளையம் ஆகிய பகுதிகளில்பாதாள சாக்கடை திட்டப் பணி நடைபெற்று வருகிறது.
கூத்தம்பாளையம் ஆதி திராவிடர் காலனியிலும், அன்னையம்பாளையம், ஒட்டம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கப்படவில்லை. சாலைகளில் மட்டும் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. முழுமையாக பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்கவேண்டும். பாதாள சாக்கடை பணிகளால், பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ளது. முறையாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு5 மாதங்களுக்கும் மேலாகிறது.இதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வீதிகள்தோறும் மின் கம்பங்கள் பழுதடைந்துள்ளன. பழுதடைந்த மின்விளக்குகளை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்.
கூத்தம்பாளையத்தில் மாநகராட்சி கழிப்பிடம் அருகே ஓராண்டுக்கும் மேலாக பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.பிரதான சாலையாக இருப்பதால் பொதுமக்கள் நாள்தோறும் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அவசர மருத்துவ உதவிக்குக்கூட ஆம்புலன்ஸ்கள் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, பாலம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT