Last Updated : 07 Feb, 2016 10:10 AM

 

Published : 07 Feb 2016 10:10 AM
Last Updated : 07 Feb 2016 10:10 AM

செங்கல்பட்டு பகுதியில் தொடரும்: பழிதீர்க்கும் படுகொலைகள் - அச்சத்தில் பொதுமக்கள்

செங்கல்பட்டு நகரத்தை ஒட்டிய பகுதிகளில் தொடரும் பழிதீர்க்கும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு நகரத்தின் அருகே காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் வல்லம் ஊராட்சி அமைந்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது, இந்த ஊராட்சியின் தலைவர் பதவியை திமுகவைச் சேர்ந்த வசந்தா என்பவர் கைப்பற்றினார். பின்னர், 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவர், தனது சகோதரி கஸ்தூரியை தலைவர் பதவிக்கு போட்டியிட வைத்து வெற்றி பெறவைத்தார்.

இதனால் இரு தரப்பினரிடையே முன்விரோதம் ஏற்பட்டது. இதை யடுத்து, கண்ணதாசனுக்கு துணையாக இருந்த சந்திரசேகர் என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். பின்னர், கடந்த 2013-ம் ஆண்டு கண்ணதாசனும் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக, வல்லம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் வசந்தாவின் மகன் வின்சென்ட் உட்பட கூலிப்படையினர் கைது செய்யப் பட்டனர்.

இந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக, வின்சென்டையும், கூலிப் படையினருக்கு உதவியதாக கருதப் படும் வல்லம் பூபதி மற்றும் அந்தோணி ஆகியோரையும் கொலை செய்யும் முயற்சிகளை எதிர்த்தரப்பு மேற்கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில், பூபதி மற்றும் அந்தோணியை கொலை செய்வதற் கான முயற்சிகளில், அருள்தாஸ் ஈடுபட்டதாகவும், அதனால் அவரை கொலை செய்ய 2 முறை முயற்சிகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அருள்தாஸை கொலை செய்ய கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதில், பலத்த காய மடைந்த அவர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள், கொலை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட கையெறி குண்டு ஒன்றினை போதையில் இருந்த நபரிடம் வழங்கிவிட்டு அவர்கள் தப்பி சென்றுள்ளனர். இந்த கையெறி குண்டை தவறாக கையாளப்பட்ட போது வெடித்ததில், விவேகானந்தன் என்பவர் காயமடைந்தார்.

அடுத்தடுத்த கொலை மற்றும் கொலை முயற்சியாக செங்கல்பட்டு நகரப் பகுதியில் அவ்வப்போது பெட்ரொல் மற்றும் நாட்டு வெடிகுண் டுகள் வீசும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

கடந்த 2014-ம் ஆண்டு, திரு மணியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ராஜகோபால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முன்பாக பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவங்களால் நகரமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து, செங்கல்பட்டு ஏஎஸ்பி ஜார்ஜி ஜார்ஜ் கூறியதாவது: பழிக்குப்பழியாக கொலைக் குற்றங் களில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு நகரப்பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்க சட்டரீதியான அனைத்து முயற்சிகளையும் போலீஸார் மேற்கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x