Published : 23 Jul 2021 07:15 AM
Last Updated : 23 Jul 2021 07:15 AM
வாலாஜா அடுத்த மேல் வீராணம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைளுக்கு ரசீது வழங்காததை கண்டித்து விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சித்தஞ்சி, அரும்பாக்கம், கீழ்வீதி, சங்கரன்பாடி, மேல் வீராணம், கீழ் வீராணம், வேடந்தாங்கல், ஜோதிபுரம், குன்னத்தூர், மேச்சேரி, சின்ன ஈசலாபுரம், காவேரிப்பாக்கம், பெருமாந்தாங்கல், தாமரைப் பாக்கம், வளையாத்தூர், போளிப்பாக்கம், ரெட்டிவலம், செய்யூர், அணைக்கட்டா புத்தூர், மகேந்திர வாடி உள்ளிட்ட 23 கிராமங்களில் கடந்த 15-ம் தேதி தொடங்கி வரும் 24-ம் தேதி வரை விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால், வாலாஜா அடுத்த மேல் வீராணம் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலை யத்தில் கடந்த 3 மாதங்களாக சுமார் 12 ஆயிரம் நெல் மூட்டைகள் மழை, வெயிலில் இருப்பதாகவும், அதற்குரிய ரசீதை விவசாயி களுக்கு வழங்காமல் காலம் கடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட மூட்டைகளை எடுக்காததால் மழையில் நனைந்து நாற்றுகள் முளைக்கத் தொடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். நெல்லுக்கான உரிய விலை கிடைக்குமா? கிடைக்காதா? என்றும் அச்சமடைந்தனர். இது தொடர்பாக நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம் விவசாயி கள் புகார் கூறியும் உரிய நடவ டிக்கை எடுக்கவில்லை என்பதுடன் அலட்சியமாக பதில் அளிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் உள்ள தங்களது நெல் மூட்டைகளுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும் எனக் கோரி நேற்று திடீர் போராட் டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.
இது தொடர்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில இளைஞரணி செயலாளர் சுபாஷ் கூறும்போது, ‘‘ராணிப் பேட்டை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொள்முதல் நிலையங் களுக்கு விவசாயிகள் கொண்டு வந்து சேர்த்துவிட்டனர். எடை போட்டு சிப்பம் கட்டும் பணியும் முடிந்துவிட்டது. ஆனால், அதற் குரிய ரசீதை விவசாயிகளுக்கு வழங்காமல் காலம் கடத்தி வந்தனர்.
இப்போது, திடீரென விழித்துக் கொண்ட அதிகாரிகள் நெல் கொள்முதல் செய்வதாக கூறி மாவட்டம் முழுவதும் 23 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 15-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறுவதாக ஒரு பொய்பை கூறியுள்ளனர். உண்மையில் இன்று (நேற்று) தான் நெல்லுக்கான ரசீது வழங்கும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இதை ஏற்கெனவே செய்திருந்தால் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் கிடைத் திருக்கும். 15-ம் தேதி முதல் கொள்முதல் நிலையம் செயல்பட்டிருந்தால் ரசீது கிடைக்காமல் மேல் வீராணத்தில் மட்டும் ஏன் விவசாயிகள் போராட்டம் நடத்தப் போகிறார்கள்’’ என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...