Published : 22 Jul 2021 05:37 PM
Last Updated : 22 Jul 2021 05:37 PM
மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணியைத் தொடங்கக் கோரிய வழக்கில் நீதிமன்றத்துக்குத் தவறான தகவல் அளித்ததாக மத்திய, மாநில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
’’தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதுவரை அந்த இடத்தில் கட்டுமானப் பணி தொடங்கப்படவில்லை.
இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நாளிலிருந்து 45 மாதங்களில் கட்டுமானப் பணி முடியும் என மத்திய அரசு உறுதியளித்தது. இந்த வழக்கில் 2018-ல் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் தற்போது தோப்பூரில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.
இதனால் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தபோது, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது தொடர்பாக ஜப்பான் நிறுவனத்துடன் 2021 மார்ச் 31-ல் ஒப்பந்தம் இறுதியாகும் என மத்திய அரசு தெரிவித்தது. இருப்பினும் இதுவரை ஒப்பந்தம் முழுமையடையவில்லை.
இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் உயர் நீதிமன்றத்தில் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளன. இதனால் மத்திய சுகாதாரத்துறைச் செயலர், எய்ம்ஸ் இயக்குநர், தமிழக முதல்வரின் செயலர், தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் இந்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT