Published : 22 Jul 2021 05:17 PM
Last Updated : 22 Jul 2021 05:17 PM
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 13 பேர் உயிரிழப்பு என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பே இல்லை என துறை அமைச்சர் கூறுகிறார். எது உண்மை என்பதை முதல்வர் ஸ்டாலின் தெளிவுப்படுத்தவேண்டும் என ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“கரோனோ தொற்று தீவிரமாக இருந்தபோது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்திருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.
நேற்று முன்தினம் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் கரோனா வைரஸ் இரண்டாவது அலையின்போது ஆக்சிசன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு ஏற்பட்டதாக எந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகளும் தெரிவிக்கவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த செய்தி அனைத்து பத்திரிகைகளும் வெளிவந்துள்ளது. மாநிலங்களிலும் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே மத்திய அரசு மேற்படி பதிலை மாநிலங்களவையில் தெரிவித்திருக்கிறது. இதில் குறை காண்பதற்கு ஒன்றும் இல்லை, இருப்பினும் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சனங்களை வைத்துள்ளனர்.
ஆனால், தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிற திமுக அரசோ, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஒரு தமிழகத்தில் உயிரிழப்பு இல்லை என்று தெரிவித்து இருக்கிறது. அதனை தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். ஒரு செய்தியை பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கின்ற உரிமை அமைச்சருக்கு உண்டு அதை நான் மறுக்கவில்லை ஆனால் அந்த செய்தியில் உண்மை இருக்கிறதா என்பதை ஆராய வேண்டிய கடமை எதிர்க்கட்சிக்கு உண்டு.
சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து ஆகஸ்டு 7 அன்று ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற அன்றைய தினமே இந்திய பிரதமருக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து ஒரு கடிதத்தை ஸ்டாலின் எழுதினார்.
அந்த கடிதத்தில் தமிழ்நாட்டில தினசரி ஆக்சிஜன் தேவை 440 டன் என்றும் அடுத்த இரண்டு வாரங்களில் தமிழ்நாட்டின் தேவை 840 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் என்றும் துரதிஷ்டவசமாக தேசிய ஆக்சிஜன் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 280 மற்றும் ஆக்சிஜன் மட்டுமே கொடுக்கப்பட்டது என்றும் இது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் குறைந்தபட்சம் 496 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தர ஒத்துக் கொள்ளப்பட்டது என்றும் ஆனால் அதற்கான ஆணை வெளியிடப் படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மேலும் தமிழ்நாடு ஆக்சிஜன் நெருக்கடியில் சிக்கி தவிப்பதாகவும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இரண்டு நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டில் 13 பேர் எதிர்ப்பாராத விதமாக இறந்து இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ் நாளிதழ்களிலும் “தமிழகத்திலுள்ள செங்கல்பட்டில் இரண்டு நாட்களுக்கு முன் அரசின் பற்றாக்குறையால் 13 பேர் இறந்தது துரதிஷ்டவசமானது” என்று முதல்வர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது
தமிழக முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதையும் குடும்ப நலத்துறை அமைச்சர் பேட்டியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் முரண்பாடு தெள்ளத் தெளிவாகிறது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், தமிழக அரசால் தெரிவிக்கப்படும் அனைத்து புள்ளி விவரங்களும் இப்படித்தான் இருக்குமோ என்ற சந்தேகம் அனைவரின் மனங்களிலும் எழுந்துள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்த கருத்து உண்மையா? அல்லது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேட்டி மூலம் தெரிவித்தாரே அந்தத் தகவல் உண்மையா என்பதை விளக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு. முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து உடனடியாக ஆராய்ந்து உண்மை நிலையை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT