Last Updated : 22 Jul, 2021 04:55 PM

 

Published : 22 Jul 2021 04:55 PM
Last Updated : 22 Jul 2021 04:55 PM

விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக இருக்கும்: அமைச்சர் பெரியகருப்பன்

வடதெரசலூர் கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட குடிநீர் குழாயில் தண்ணீர் வருகிறதா என ஆய்வுசெய்யும் அமைச்சர் பெரியகருப்பன்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விடுபட்டப்போன மாவட்டங்களில் தேர்வு செய்யப்படும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் தமிழகத்திலுள்ள 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியேற்றுள்ளனர்.

ஆனால், புதிய மாவட்டங்கள் உதயமானதால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தொகுதி வரையறைப் பணிகள் காரணமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்தத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என அண்மையில் உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருப்பதால், தேர்தலை நடத்த தமிழக அரசு ஆயத்தமாகி வருகிறது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சிப் பணிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மேட்டத்தூர் கிராமத்தில் நூறநாள் வேலை உறுதித் திட்டப் பணியினையும், வாழவந்தான்குப்பம் கிராமத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நிதியுதவின் கீழ் பெண்களால் நடத்தப்படும் சிமெண்ட் கற்கள் தயாரிப்புக் கூடத்தையும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து வடதெரசலூர் கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட குடிநீர் குழாயில் தண்ணீர் வருகிறாத எனவும், செம்பிமாதேவி-பின்னல்வாடி வரையிலான சாலைப் பணியையும் ஆய்வு செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "முந்தைய அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்த அச்சப்பட்டனர். இதை எதிர்த்து திமுக நீதிமன்றத்தை நாடியதன் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் சில மாவட்டங்கள் விடுபட்டது. அதற்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் நடத்த ஆயத்தமாகி வருகிறோம். விடுபட்ட போன மாவட்டங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்படும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக இருக்கும்" என்றார்.

இந்த நிகழ்ச்சிகளில் ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம்கார்த்திக்கேயன், உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மணிக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x