Published : 22 Jul 2021 02:53 PM
Last Updated : 22 Jul 2021 02:53 PM
மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இல்லாத புதுப் பேருந்துகளைக் கொள்முதல் செய்யக் கூடாது எனத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வி நிறுவனங்கள், அரசுக் கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என 2016ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.
இந்தச் சட்டப்படி, மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 10 சதவீதப் பேருந்துகள் மட்டும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதி உள்ளதாகக் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தார்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வசதிகளுடன் குறிப்பிட்ட பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மோசமான சாலைகளை மேம்படுத்தியபின், சட்டப்படியும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் வசதிகள் செய்யப்பட்ட பேருந்து விலை 58 லட்சம் ரூபாய் அளவுக்குச் செலவாகும் எனவும், நிதி பிரச்சினை உள்ளதால் தற்போது 10 சதவீதப் பேருந்துகள் மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கொள்முதல் செய்யப்படுவதாகவும், கரோனா பாதிப்பு உள்ளதாகவும், இந்தியா ஏழை நாடு எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, ஆட்சியாளர்கள் ஏழைகளாக உள்ளனரா? எத்தனை எம்எல்ஏக்கள் ஏழைகள்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தையும், அதன்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைகளையும் அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
மேலும், 2016ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யத் தடை விதித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment