Published : 22 Jul 2021 01:50 PM
Last Updated : 22 Jul 2021 01:50 PM
வேட்டைக்குச் சென்றவர்களைப் பிடிக்க முயன்றபோது நாட்டுத் துப்பாக்கி வெடித்து வனவருக்குக் காயம் ஏற்பட்டதால், இருவர் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கீழ் மொரப்பூர், கொளகம்பட்டி, இராமியணஹள்ளி, கெவரமலை காப்புக் காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாட வருபவர்களைத் தடுப்பதற்காக, இரவு நேரங்களில் வனத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு மொரப்பூர் வனச்சரகர் சிவகுமார் தலைமையில், வனவர் வேடியப்பன், ஞானவேல் ராஜா உள்ளிட்ட வனத் துறையினர் ராமியம்பட்டி அருகே உள்ள கெவரமலை காப்புக்காடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை வனப் பகுதியில், வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியுடன் இருவர் சுற்றித் திரிந்தனர். வனத் துறையினரைக் கண்டதும் அங்கிருந்து இருவரும் தப்பிக்க முயன்றனர். அப்பொழுது வனத் துறையினர் சுற்றி வளைத்து இருவரையும் பிடித்தனர்.
அப்போது வேட்டையாட வந்தவரின் கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி, எதிர்பாராதவிதமாக வெடித்துள்ளது. இதில் வனவர் வேடியப்பன் நெற்றியில் குண்டு பட்டு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் வன விலங்குகளை வேட்டையாட வந்த குமார் என்பவருக்குக் காலில் காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடத்தூர் அடுத்த நொச்சிக்குட்டை பகுதியைச் சேர்ந்த குமார், சக்திவேல் இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வன விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனத்தை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் காயமான வனவர் வேடியப்பன் மற்றும் வேட்டைக்குச் சென்ற குமார் இருவரையும் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். முதலுதவிக்குப் பிறகு வேட்டைக்காரர் குமார் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரையும் வனத் துறையினர், கோபிநாதம்பட்டி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT