Published : 22 Jul 2021 10:04 AM
Last Updated : 22 Jul 2021 10:04 AM
சென்னை, கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அப்போது, போக்குவரத்துத் துறையில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடைபெற்றதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
கடந்த ஆட்சியில் வாகனங்களுக்கான ஜிபிஎஸ் கருவி கொள்முதலில் தகுதியுள்ள நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு முறைகேடாக டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாகவும் விஜயபாஸ்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனிடையே ஜிபிஎஸ் கருவிகளைக் கொள்முதல் செய்யப் போடப்பட்ட உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இது தொடர்பாக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை எம்.ஆர்.விஜயபாஸ்கர் மறுத்துவந்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மு.க.ஸ்டாலின் கூறிவந்தார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமாக கரூரில் உள்ள வீடு, நிறுவனங்கள், உறவினருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார், இன்று (ஜூலை 22) அதிகாலை முதல் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜயபாஸ்கரின் உதவியாளர்கள், ஆதரவாளரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
ஊழல் புகாருக்கான ஆதாரங்கள் இந்த சோதனையில் சிக்கியுள்ளதா, ஏதேனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா என்ற தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இச்சோதனையை முன்னிட்டு கூடுதல் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT