Published : 22 Jul 2021 03:15 AM
Last Updated : 22 Jul 2021 03:15 AM

வெளிநாடுகளை போல் வேலூரிலும் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விதி மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்: உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தகவல்

ஏ.எஸ்.பி., ஆல்பர்ட் ஜான்.

வேலூர்

வேலூர் அண்ணா சாலையில் வாகன நெரிசலை குறைக்க வெளிநாடுகளைப் போல் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விதி மீறும் வாகன ஓட்டிகளை கண்காணித்து அபராதம் விதிக்க இ-செலான் போர்டல் நடைமுறை விரைவில் அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளது என உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித் துள்ளார்.

வேலூர் மாநகராட்சி அண்ணா சாலையில் தினசரிஇரு சக்கர வாகன நெரிசல் என்பது சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக. முக்கியமான நகரப் பேருந்து நிறுத்தங்களில் சாலையை ஆக்கிரமித்து ஒழுங்கற்ற முறையில் நகரப் பேருந்துகள், ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலை யோர ஆக்கிரமிப்பு கடைகள், நோ-பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

6.5 கி.மீ பயண நெரிசல்

வேலூர் தொரப்பாடி எம்ஜிஆர் சிலையில் இருந்து கிரீன் சர்க்கிள் வரையிலான சுமார் 6.5 கி.மீ தொலைவை இரு சக்கர வாகனங்களில் சராசரியாக 25-27 கி.மீ வேகத்தில் பயணித்தால் 15 நிமிடங்கள் ஆகிறது. இந்த பயண நேரத்தை குறைத்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணியை வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சில நாட்களுக்கு முன்பாக டிவிட்டர் வழியாக நடவடிக்கை எடுத்தார்

இ-செலான் போர்டல்

வெளிநாடுகளில் இருப்பது போன்று சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்காணிப்பு கேமராக்கள் வழியாக கண்காணித்து அபராதம் விதிக்கும் நடைமுறையை கொண்டுவரவுள்ளனர். இதற்காக, வடக்கு காவல் நிலையத்தில் உள்ள கட்டுப் பாட்டு அறையில் இருந்தபடி விதிமீறல்களை கண்காணிக்க உள்ளனர்.

இந்த திட்டத்தின் முதற்கட்ட மாக நோ-பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அடையா ளம் கண்டு 2 முறைக்கு மேல் விதியை மீறினால் அதுகுறித்த புகைப்படத்தை உரிமையாளரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைத்து அபராதம் வசூலிக்க உள்ளனர்.

இதே நடைமுறை பேருந்து களுக்கும் பொருந்தும் என்பதால் இ-செலான் போர்டல் நடைமுறைக்கு வந்தால் ஓரளவுக்கு நெரிசல் குறையும் என கூறப்படுகிறது. இதன் அடுத்த கட்டமாக ஹெல்மெட் அணியாமல் செல்வது, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்கள், சிகப்பு விளக்கு சிக்னல்களை மீறி செல்பவர்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளனர்.

சிக்னல்களின் நேரம் மாற்றம்

வேலூர் டோல்கேட், முஸ்லிம் மேல்நிலை பள்ளி,திருப்பதி-திருமலை தேவஸ் தானம் சந்திப்பு, தெற்கு காவல் நிலையம், பழைய மீன் மார்க்கெட், மக்கான், பேலஸ் கபே, கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள சிக்னல்களில் நேரத்திலும் சிறு மாற்றங்கள் செய்யவுள்ளனர். இதன்மூலம், தொரப்பாடியில் இருந்து கிரீன் சர்க்கிள் வரையிலான பயண நேரத்தை 5 நிமிடங்கள் குறைப்பதுடன் வாகனத்தின் சராசரி வேகமும் 30-32 கி.மீ-ஆக உயரும் என கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறும்போது, ‘‘இ-செலான் தளத்துடன் கட்டுப்பாட்டு அறை யின் நெட்ஒர்க் தொடர்பை இணைப்பதில் சிறு குறைபாடு உள்ளது. அதை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப குழுவி னர் ஈடுபட்டுள்ளனர். அதை சரி செய்த பிறகு இ-செலான் போர்டல் நடைமுறைக்கு வரும். சோதனை அடிப்படையில் ஏற்கெனவே, சாரதி மாளிகை பகுதியில் விதிகளை மீறி வாகனங்களை நிறுத்திய 55 வாகனங்கள் மீது விதிமீறல் வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் போது போக்குவரத்து காவலர் பற்றாக்குறைக்கும் தீர்வு கிடைக்கும்’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x