Last Updated : 21 Jul, 2021 07:37 PM

1  

Published : 21 Jul 2021 07:37 PM
Last Updated : 21 Jul 2021 07:37 PM

மதுரையில் 5 பைசாவுக்கு பிரியாணி விற்பனை; காலை முதலே திரண்ட மக்கள்: 10 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது

மதுரை

பிரியாணிக் கடை திறப்பு விழாவை முன்னிட்டு 5 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி என விளம்பரம் செய்ததால், விற்பனை தொடங்கிய 10 நிமிடங்களில் பிரியாணி விற்றுத் தீர்ந்தது.

மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரசாந்த்- அக்ட்சயா தம்பதியர். இவர்கள், மதுரையில் சுகன்யா என்ற பெயரில் அசைவ ஓட்டல் நடத்துகின்றனர். ஓட்டல்கள் தெற்குவாசல், புதுமகாளிப்பட்டியில் ஏற்கெனவே செயல்படும் நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி தங்களது ஓட்டலின் 3-வது கிளையைத் திறக்கத் திட்டமிட்டனர்.

இதற்காக செல்லூரில் பாலம், ஸ்டேசன் ரோடு பகுதியில் புதிய கிளையைத் திறக்க ஏற்பாடு செய்தனர். இதன்படி, இன்று புதிய கிளை திறக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு 5 பைசாவுக்கு சிக்கன் சாப்ஸுடன் கூடிய 2 பிளேட் சிக்கன் பிரியாணி விற்பனை என வாட்ஸ் அப் மூலமும், செல்லூர் பகுதியில் சுவரொட்டிகள் மூலமும் விளம்பரம் செய்திருந்தனர்.

குறைந்த அளவிலான நபர்களுக்கு மட்டுமே இந்தத் திறப்பு விழா சலுகை என்று தெரிவித்து இருந்தாலும், இதை அறிந்த பிரியாணி பிரியர்கள் ஏராளமானோர் இன்று காலை முதலே கடைக்கு முன்பு திரண்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்த அவர்கள், திறப்பு விழா முடிந்தபின் முண்டியடித்துக் கொண்டு பிரியாணி பார்சல்களை வாங்கினர்.

திட்டமிட்டு இருந்ததைவிடக் கூடுதலான நபர்கள் வந்ததால் 50 நபர் என்பதை உயர்த்தி சுமார் 120 பேருக்கு சிக்கன் பிரியாணி, சிக்கன் சாப்ஸ் வழங்கப்பட்டது. காலை முதல் மதியம் வரை இச்சலுகை என, அறிவிக்கப்பட்டாலும், விற்பனை தொடங்கிய 10 நிமிடங்களில் 120 பிரியாணி விற்றுத் தீர்ந்ததாகக் கடையின் உரிமையாளர் அக்ட்சயா தெரிவித்தார்.

மேலும், அவர் கூறும்போது, ''இத்தொழிலில் சுமார் 30 ஆண்டுகளாக இருக்கிறோம். எனது சகோதரி சுகன்யா பெயரில்தான் பிரியாணி கடையைத் தொடங்கினோம். 3-வது கிளையைத் தமிழ்நாடு ஓட்டல் சங்க நிர்வாகி குமார் திறந்து வைத்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். புதிய கிளை திறக்கும்போது, வாடிக்கையாளர்கள், பிரியாணி பிரியர்களுக்காகத் திறப்புவிழா சலுகையாக 5 பைசாவுக்கு பிரியாணி வழங்க முடிவெடுத்தோம்.

பழைய நாணயங்களின் முக்கியத்துவம் கருதியும், 5 பைசாவை எத்தனை பேர் வைத்திருக்கின்றனர் என்பதை அறியும் வகையிலும், பழைய நாணயங்களை நாங்கள் சேகரிக்கும் நோக்கிலும் இந்தச் சலுகை விலை பிரியாணி திட்டத்தை அறிவித்தோம். மேலும், இன்று மதியத்திற்கு மேல் ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால் சிக்கன்- 65 இலவசம், கிரில் சிக்கன் வாங்கினால் 4 புரோட்டா இலவசம் என்ற சலுகை அறிவிக்கப்பட்டு விற்கப்பட்டது. நாளையும் (ஜூலை 22) வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது சலுகை அளிக்கலாம் எனத் திட்டமிட்டுள்ளோம்'' என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் பிரியாணி வாங்கக் குவிந்தவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற ஓட்டல் நிர்வாகம் அறிவுறுத்தியது. இருப்பினும், விதிமுறையைப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x