Published : 21 Jul 2021 03:59 PM
Last Updated : 21 Jul 2021 03:59 PM
தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட சம்பவத்தில் இந்தியாவின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி விட்டது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (ஜூலை 21) சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
"இந்தியாவின் ஜனநாயகத்துக்கும், குடியரசுக்கும், பாதுகாப்புக்கும் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனை பாஜக அரசு, மோடி அரசு மூடி மறைக்கிறது. இதனைக் கண்டு பொதுமக்கள் கிளர்ந்து எழ வேண்டும். இல்லை என்றால், நாடு அடிமைப்படுத்தப்பட்டுவிடும்.
இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் எனும் மென்பொருளைக் கொண்டு நமது நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள், ஊடகவியலாளர்கள் என, சுமார் 300 பேரின் தொலைபேசி இணைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக உள்ளது. எங்கள் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சும் உளவு பார்க்கப்பட்டுள்ளது. நமது நாட்டு ராணுவ ரகசியங்கள் கூட கண்காணிக்கப்பட்டுள்ளன. இந்த சதித் திட்டத்துக்கு மோடி அரசாங்கம் துணை போயுள்ளது.
இந்தியாவின் மூன்று முக்கிய உளவு அமைப்புகளுக்குக் கூட இது தெரியவில்லை. ஆனால், நமது உள்துறை அமைச்சருக்குத் தெரிந்திருக்கிறது. பிரதமருக்குத் தெரிந்துள்ளது. இதில், இந்தியாவின் பாதுகாப்பு எங்கே இருக்கிறது?
நம் வீட்டில் நடப்பது அண்டை நாடுகளில் தெரிகிறது. ஜனநாயகத்தையே சீரழிக்கும் இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. தன்னுடைய உளவு அமைப்புகளைக் கூட இந்திய அரசு நம்பவில்லை. அதிகாரிகள், நீதிபதிகள், ஊடகவியலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமர் மோடி மக்களவையில் இதுகுறித்து ஒரு வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் நீதிபதி ஒருவரை நியமித்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நம் நாட்டுக்கு எளிதில் கிடைத்தது அல்ல சுதந்திரம். இதற்காகப் பல தலைவர்கள் போராடி சிறை வாழ்க்கையை அனுபவித்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி மிகச் சிறப்பாக இருந்தது.
ஆனால், தற்போது தடுப்பூசி விவகாரத்தில் பிரதமர் மோடி தனது இரண்டு நண்பர்களுக்கு மட்டுமே உற்பத்தி உரிமையை வழங்கி இருக்கிறார். டெல்லி, குஜராத், கர்நாடகா எனப் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சொல்வது ஏற்புடையது அல்ல.
தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் நாளை (ஜூலை 22) சென்னையில் எனது தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் செல்ல உள்ளோம். அரசு அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் இது நடைபெறும்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT