Published : 21 Jul 2021 03:17 AM
Last Updated : 21 Jul 2021 03:17 AM

புற ஊதா கதிர் விளக்கு மூலமாக ரூபாய் நோட்டுகளில் படர்ந்துள்ள கிருமி தொற்றுகளை அழிக்கும் பெட்டகம்: ஆசிரியர் வழிகாட்டுதலுடன் மாணவி சத்யா வடிவமைப்பு

ரூபாய் நோட்டுகளில் படர்ந்துள்ள கிருமி தொற்றுகளை எளிதாக அழிக்கும் புற ஊதா கதிர் பெட்டகத்தை வடிவமைத்துள்ள மாணவி சத்யா. அருகில், அறிவியல் ஆசிரியர் தமிழ்கனி உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை

ரூபாய் நோட்டுகளில் படர்ந்துள்ள கிருமி தொற்றுகளை எளிதாக அழிக்கும் புற ஊதா கதிர் விளக்கு பெட்டகத்தை அறிவியல் ஆசிரியர் தமிழ்கனி வழிகாட்டுதலுடன் குப்பநத்தம் அரசு உயர் நிலை பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி சத்யா வடிவமைத்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு வர முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மற்றும் சுகாதாரத் துறையினர் பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டும், வெற்றி காண முடியவில்லை. கரோனா தொற்று பல வடிவங்களில் பரவி வருவதாக கூறப்பட்டாலும், அனைத்து நிலைகளில் உள்ள மக்களால் நொடிக்கு நொடி பயன்படுத்தும் ‘ரூபாய் நோட்டு’கள் மூலமாக பரவலாம் என்ற அச்சம், ஒவ்வொருவரது ஆழ்மனதில் இருந்து விலகி செல்லவில்லை. இதனால், மற்றவர்களிடம் இருந்து பெறப்படும் ரூபாய் நோட்டுகளை, வெயிலில் சிறிது நேரம் வைத்துவிட்டு, அதன்பிறகு பயன்படுத்துபவர்களை காணலாம்.

இதற்கான தீர்வை எளிதாக வடிவமைத்துள்ளது, திருவண் ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் அரசு உயர்நிலை பள்ளியின் அறிவியல் குழு. புற ஊதா கதிர் விளக்கை பயன்படுத்தி, 7 விநாடிகளில் கிருமி தொற்றை அழித்துவிடலாம் என அறிவியல் குழு தெரிவிக்கிறது. அதே நேரத்தில் புற ஊதா கதிர் விளக்கை, மிகவும் எச்சரிக்கை யுடன் கையாள வேண்டும் என எச்சரிக்கிறது. புற ஊதா கதிர் ஒளியானது மனித உடலில் நேரிடையாக படும்போதும், கண் களால் பார்க்கும்போது ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

படைப்பு குறித்து அறிவியல் ஆசிரியர் தமிழ்கனி கூறும்போது, “கரோனா ஊரடங்கு காலத்தில் நேரத்தை வீணடிக்காமல், பயனுள்ளதாக அமைத்து கொள்ள வேண்டும் என மாணவர்களை அறிவுறுத்தி வருகிறோம். அப்போது, பத்தாம் வகுப்பு மாணவி சத்யா என்பவர், ரூபாய் நோட்டு மூலம் கரோனா தொற்று பரவும் என்ற அச்சத்தில் இருந்து மக்களை, எவ்வாறு விடுவிப்பது என கேள்வி எழுப்பினார். அதன் எதிரொலி யாக புற ஊதா கதிர் விளக்கு பெட்டகம் வடிவமைப்பது என திட்டமிட்டோம். கேள்வி எழுப்பிய மாணவியை கொண்டு ஆய்வு பணி தொடங்கப்பட்டது” என்றார்.

மாணவி சத்யா கூறும்போது, “எங்களது படைப்புக்காக புற ஊதா கதிர் விளக்கை வாங்கி வந்தோம். பின்னர், சிறிய மரப்பெட்டியை உருவாக்கி, அதன் உள்ளே உள்ள கீழ் பகுதியில் புற ஊதா கதிர் விளக்கை பொருத் தினோம். இதில், புற ஊதா கதிரின் ஒளி, ஒரு திசையில் மட்டும் பட்டது. இதனால், முகம் பார்க்கும் கண்ணாடியை பெட்டி யின் உள்ளே 4 திசைகளில் பொருத்தினோம். இதன்மூலம், புற ஊதா கதிர் ஒளியானது 4 திசைகளிலும் எதிரொலிக்கிறது.

மேலும், பெட்டியை திறக்கும்போது, புற ஊதா கதிர் இயங்காது. நமது மீது பட்டு விட்டால் பக்க விளைவு ஏற்படும் என்பதால், அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மூடிய நிலையில், புற ஊதா கதிர் விளக்கு பெட்டகம் இயங்கும். பெட்டியின் உள்ளே ரூபாய் நோட்டுகளை போட்டுவிட்டால், அதில் படர்ந்திருக்கும் கிருமி தொற்றுகளை 7 விநாடிகளில் புற ஊதா கதிர் ஒளி அழித்துவிடும். இதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கிறது. இதனை, தமிழக அரசு அங்கீகரித்து, கடைகள் பொது இடங்களில் பயன்படுத்தி னால், கரோனா தொற்று அச்சம் நீங்கும்” என்றார்.

மேலும், அறிவியல் ஆசிரியர் தமிழ்கனி கூறும்போது, “கிருமி தொற்றுகளை எளிதாக அழிக்கும் ஆற்றல் மிக்கது புற ஊதா கதிர் விளக்கு. குடிநீர் சுத்திகரிப்பு, துணிகள் சுத்தம் செய்தல் போன்ற தேவைக்கு புற ஊதா கதிரை பயன்படுத்தி வருகின்றனர். நாங்கள், ரூபாய் நோட்டுகளில் படர்ந்துள்ள கிருமி தொற்றுகளை அழிக்க பயன்படுத்தி உள்ளோம். ரூபாய் நோட்டுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. புற ஊதா கதிர் விளக்கு பெட்டகம் வடிவமைப்பதற்கான செலவு ரூ.1,500 தான். ரூபாய் நோட்டுகள் மட்டும் இல்லாமல் பிஸ்கெட், காய்கறி உள்ளிட்ட பொருட்களை உள்ளே வைத்தால், அவற்றின் மீது படர்ந்துள்ள கிருமி தொற்றுகள் அழிக்கப்படும். நமது தேவைக்கு ஏற்ப பெரிய வடிவிலும் பெட்டியை வடிவமைக்கலாம். எங்களது முயற்சிக்கு தலைமை ஆசிரியர் அண்ணாமலை உறுதுணையாக இருந்தார்” என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x