Published : 20 Jul 2021 09:40 PM
Last Updated : 20 Jul 2021 09:40 PM

இந்திய கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல் செய்யக் கூடாது: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரின்போது மத்திய அரசு நிறைவேற்ற உத்தேசித்துள்ள இந்தியக் கடல்சார் மீன்வள மசோதா 2021, இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளதால், அதனை நாடாளுமன்றத்தில் முன்மொழிய வேண்டாமென்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள இந்தியக் கடல்சார் மீன்வள மசோதாவில் குறிப்பிட்டுள்ள விதிகள், கடலோர மீனவர் சமூகங்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது என்றும், இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் மாநிலப் பட்டியலின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை மீறும் சில உட்பிரிவுகளைக் கொண்டுள்ளதாகவும் முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள மசோதாவில் உள்ள சில பிரிவுகளில், மீனவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்துதல் சிறையில் அடைத்தல், மீனவர்களுக்கு எதிராக வலிய நடவடிக்கைகளை எடுத்தல் கட்டணங்களை விதிப்பது, பெரும் அபராதங்களை விதிப்பது போன்ற மீனவர்களுக்கு எதிரான உட்பிரிவுகள் இருப்பதால், இது பரவலாக எதிர்ப்புகளையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என்று பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அனைத்துத் தரப்பு மக்களுடன் விவாதம் மற்றும் ஆலோசனைகள் நடத்தியபிறகு மீன்வர்களின் கருத்துகளைப் பெற்று மீனவர் நலன் காக்கும் வகையிலும் கடல் வளத்தைக் காக்கும் வகையிலும் புதியதொரு மசோதாவை நாடாளுமன்றத்தில் பின்னர் தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்துள்ள முதல்வர் தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தியக் கடல்சார் மீனவர் மசோதா 2021 ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியினை தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x