Last Updated : 20 Jul, 2021 08:51 PM

 

Published : 20 Jul 2021 08:51 PM
Last Updated : 20 Jul 2021 08:51 PM

என்எல்சி முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: வேலைநிறுத்தம் பற்றி வரும் 23-ல் போராட்டக்குழு முடிவு

புதுச்சேரி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் என்எல்சி ஓப்பந்த தொழிலாளர் பணி நிரந்திரம் செய்யக்கோரி நடந்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட என்.எல்.சி தொழிலாளர்கள். படம் எம்.சாம்ராஜ்

புதுச்சேரியில் நடந்த என்எல்சி முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. வேலைநிறுத்தம் பற்றி வரும் 23ல் போராட்டக்குழு முடிவு எடுக்கவுள்ளது.

நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் உரிமை மீட்பு கூட்டமைப்பு வரும் 24ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்திருந்தன. இது தொடர்பான பேச்சுவார்த்தை புதுச்சேரியில் இன்று நடைபெற்றது.

புதுச்சேரியில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம், என்.எல்.சிக்கு வீடு,நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர் சங்கம், திராவிட ஒப்பந்த தொழிலாளர் சங்கம், நாம் தமிழர் நல சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். என்.எல்.சி அதிகாரிகள்,தொழிலாளர் நல உதவி ஆணையர் ஆகியோர் பங்கேற்றனர்.

ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்,சம வேலை சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெற இருக்கிறது.இந்த கோரிக்கைகள் குறித்து புதுச்சேரியில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தலைவர் சேகர் கூறுகையில், "முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. தோல்வியில் முடிந்தது. கோரிக்கைகளை நிறைவேற்றுவது பற்றி பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. என்எல்சிக்கு வீடு நிலம் கொடுத்து பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வடமாநிலத்திலிருந்து நியமனம் நடப்பது மிகவும் தவறானது. அதனால் வரும் 24ல் வேலை நிறுத்தம் நடத்துவது பற்றி 23ம் தேதி போராட்டக்குழு கூடி முடிவு எடுக்கும்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x