Published : 20 Jul 2021 06:29 PM
Last Updated : 20 Jul 2021 06:29 PM
கார்ட்டூன் பொம்மைகள், குழந்தைகளைக் கவரும் விலங்குகளை வரைந்து, கரோனா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளின் பயத்தைப் போக்கும் வகையில் கரோனா சிறப்பு வார்டுகள் தயாராகி வருகின்றன.
புதுச்சேரியில் கரோனாவுக்காகச் சிறப்பு மருத்துவமனையாக இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டாவது அலையின்போது மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என அனைவரும் முழு வீச்சுடன் பணியாற்றினர். ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தொடங்கி கரோனாவை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் முன்கூட்டியே கரோனாவுக்காகக் குழந்தைகள் வார்டுகளைத் தயார் செய்து வருகின்றனர். இவ்வார்டுகள் குழந்தைகளை மகிழ்வூட்டும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி சுகாதாரத்துறையுடன், கேர்மேக்ஸ் அறக்கட்டளை மற்றும் பெயின்ட் பாண்டிச்சேரி அமைப்புகள் உடன் இணைந்து வார்டுகளைப் புத்துயிரூட்டி வருகின்றனர். குறிப்பாக இரு வார்டுகள் மொத்தமாக நூறு படுக்கை வசதிகளுடன் தற்போது தயாராகி வருகிறது. அனைத்துப் பணிகளும் இவ்வாரத்துக்குள் நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
குழந்தைகள் வார்டினுள் நுழைந்தவுடன் சுவரெங்கும் கார்ட்டூன் பாத்திரங்கள், குழந்தைகளைக் கவரும் விலங்கு பொம்மைகள், விளையாட்டுகள் என வரிசையாக வண்ணம் தீட்டி வரையப்பட்டு வருகின்றன. குழந்தைகள் மகிழ்வுடன் இருக்கும் சூழலை உருவாக்க அவர்கள் மனத்தினுள் நினைக்கும் கார்ட்டூன் சித்திரங்கள் சுவரெங்கும் விரிந்துள்ளன.
முக்கியமாக குழந்தைகளுக்கு ஆக்சிஜன் வசதி தேவைப்படும் குழாய்கள் அனைத்தும் செடிகளின் வண்ணத்தில் பசுமை வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. செடிகள் பூத்து, இலைகள் வரையப்பட்டு ஆக்சிஜன் குழாய்களைப் பார்த்து குழந்தைகள் பயப்படாத வகையில் உருவாகி வருகின்றன.
இது தொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், "நூறு படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான கரோனா வார்டு இரண்டு தயாராகிறது. அவை முழுக்க குழந்தைகளின் மனதில் நம்பிக்கையூட்டும் வகையில் வடிவமைத்து வருகிறோம். மருத்துவமனை என்றால் குழந்தைகள் மனதில் பயம் ஏற்படாத வகையில் அவர்கள் விரும்பும் சூழலை உருவாக்குவதே இதன் எண்ணம். இப்பணிகளை ஒரு வாரத்துக்குள் நிறைவு செய்துவிடுவோம். மூன்றாவது அலையையொட்டி இந்த முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" என்று குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT