Published : 20 Jul 2021 03:45 PM
Last Updated : 20 Jul 2021 03:45 PM
நம்மையும், சமூகத்தையும் பாதுகாக்க வேண்டுமென்ற அக்கறையோடு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கி வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று (ஜூலை 20) தடுப்பூசி முகாமினை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
முன்னதாக ஆளுநர், தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்று அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து அவர் கல்லூரி வளாகத்தில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர் பிரகாஷ்குமார், சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், கல்லூரி முதல்வர் ராஜி சுகுமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:
''வருங்காலத்தில், இந்திய நாட்டை வலிமை மிகுந்த நாடாக மாற்றுவதில் மாணவர்களின் பங்கு அதிகம். இளைஞர்கள் வாய்ப்புகள் கிடைக்கும்போது அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு தடுப்பூசி தூதுவர்களாக மாற வேண்டும். ஏனென்றால் தடுப்பூசி பற்றிய தயக்கம் இன்றும் இருக்கிறது.
குறிப்பாக நடிகர் விவேக் இறப்பதற்கு முந்தைய நாள் தடுப்பூசி எடுத்துவிட்டு, துரதிர்ஷ்டவசமாக அவர் இறந்துபோனதால் தமிழகம், புதுச்சேரியில் தடுப்பூசி தயக்கத்தை நீக்குவது பெரும்பாடாகப் போய்விட்டது. பிரதமர், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பாகுபலி போல பலம் பொருந்தியவர்களாக மாறுகிறார்கள் என்று கூறினார். நீங்களும் பலம் பொருந்தியவர்களாக மாற வேண்டும். நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் பலம் பொருந்தியவர்களாக மாற்ற வேண்டும். எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும்.
பெண்கள் தங்களது உடல் நிலையைப் பேணுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தங்களது கணவரையும், குழந்தைகளையும் பாதுகாப்பது போலவே குடும்பப் பொறுப்பு, சமூகப் பொறுப்புகளுக்கு இடையிலும் தங்களது நலனையும் கவனித்துக் கொள்ள வேண்டும். எல்லாப் பணிகளையும் ஈடுபாட்டோடு செய்யும்போது அது வெற்றியைக் கொடுக்கும். இலக்குகளை அடைவதில் ஆண்களை விடப் பெண்களுக்கு சவால்கள் அதிகம். அவற்றை எதிர்கொண்டு சாதிக்க வேண்டும். பெண்கள் தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும்.
புதுச்சேரியில் கரோனாவைக் கட்டுப்படுத்தி இருக்கிறோம் என்பதை விட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து அதன் மூலமாக கரோனாவைக் கட்டுப்படுத்தி இருக்கிறோம் என்பதில் புதுச்சேரி நிர்வாகம் பெருமை கொள்கிறது. மக்களுக்கான வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொண்டே விஞ்ஞான பூர்வமாக ஒவ்வொரு முயற்சியையும் எடுத்து வருகிறோம்.
புதுச்சேரியில் நாம் கரோனாவைக் கட்டுப்படுத்திய விதத்தை உயர் நீதிமன்றம் பாராட்டி இருக்கிறது. கல்லூரியில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் அச்சமின்றி கல்லூரிக்கு நேரிடையாக வந்து பாடங்களைப் படிக்க வேண்டும் என்பதற்காகவே அரசு இந்தத் தடுப்பூசி ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் அவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
பழங்குடி மக்கள் அதிகம் வாழும் தெலங்கானா மாநிலத்தில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவர்கள் மத்தியில் அமர்ந்து நான் இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டேன். இதனால் பழங்குடி மக்கள் மத்தியில் புரட்சி ஏற்பட்டிருக்கிறது. அதைப்போல, இளைஞர்கள் அனைவரும் தடுப்பூசி தூதுவர்களாக மாறி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஜனநாயக நாட்டில் யாரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. நம்மையும், சமூகத்தையும் பாதுகாக்க வேண்டுமென்ற அக்கறையோடு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்ட போதும், புதுச்சேரியில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எற்பட்டதில்லை''.
இவ்வாறு ஆளுநர் தமிழிசை பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT