Published : 20 Jul 2021 02:55 PM
Last Updated : 20 Jul 2021 02:55 PM

கோபத்தில் கர்நாடகா; காவிரி-குண்டாறு உள்ளிட்ட திட்டங்களுக்கும் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்ப்பு காரணமாக கோபத்தில் உள்ள கர்நாடக அரசு, தமிழகத்தின் முக்கிய திட்டமான காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட அனைத்து நீர்ப்பாசன திட்டங்களுக்கும் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக நலன் பாதிக்கப்படும் என்பதால் அனைத்து அரசியல் கட்சிகளையும் திரட்டிய தமிழக அரசு, மிகப்பெரிய அரசியல் அழுத்தத்தை கர்நாடக அரசுக்கு அளித்ததன் காரணமாக மத்திய அமைச்சர் அத்திட்டம் நிறைவேறாது என உறுதியளித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கர்நாடக அரசு, காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட தமிழகத்தில் நிறைவேற்றப்படும் நீர்பாசன திட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

நேற்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், “காவிரி விவகாரத் தீர்ப்பின் படி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவை விட கூடுதலாக எடுத்துக்கொள்ள உரிமை கிடையாது.

எனவே காவிரி- வைகை-குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற அனுமதி அளிக்கக் கூடாது, அது மட்டுமல்லாமல் காவிரியின் குறுக்கே எந்த நீர் திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது.

மேலும், மொத்தம் பங்கீடு செய்யப்பட்ட மொத்த நீரான 483 டி.எம்.சி.க்கு மேல் இரு மாநில எல்லையான பில்லிகுண்டுலுவுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள நீர் கர்நாடகத்துக்கு உரிமையானது என ஏற்கெனவே தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே, கர்நாடகத்துக்கான நீரை மடை மாற்றிச் சேகரிக்கும் வகையில் அமையவுள்ள காவிரி- வைகை- குண்டாறு திட்டத்தை நிறைவேற்றத் தடை விதிக்க வேண்டும். குறிப்பாக மேட்டூரிலிருந்து உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட ஏரிகளில் சேகரிக்கும் சர்பகங்கா திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும்.

புது கட்டளை நீர் பாசன திட்டம், ஆதனூரில் கொள்ளிடத்துக்கு குறுக்கே தடுப்பணை கட்டத் தடை விதிக்க வேண்டும். கரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், நாமக்கல், குளித்தலை, முசிறி, சீர்காழி, உள்ளிட்ட இடங்களில் தடுப்பணைகள் திட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்.

அதேபோல ராஜவாய்கால் வடிகால் நீர் பாசன திட்டம், நொய்யல் ஆறு நீர் திட்டம், கல்லணை வடிகால் நீர் திட்டம், தடுப்பணைகள் கட்டப்படுவதும் தடுக்கப்பட வேண்டும். எனவே இதுபோன்ற திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்த நிரந்தரத் தடை உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்.

அதேபோல காவிரியில் வரும் உபரி நீரைச் சேகரிக்கும் வண்ணம் காவிரி - குண்டாறு - வைகை நதிகள் இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது, எனவே இந்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்க முடியாதபடி தடை உத்தரவு விதிக்க வேண்டும்.

ஏனெனில் இத்திட்டத்தை அனுமதிப்பதன் மூலம் காவிரி தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள 177.25 டி.எம்.சி அளவை விட பங்கீட்டு அளவு அதிகமாகிறது. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது போல, மாநிலங்களுக்கு காவிரி நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டது போக உபரியாக காவிரி படுகையில் மீதமுள்ள நீரைத் தங்களின் மாநிலப் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்.

மேலும், காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் மூலமாக 45 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கூடுதலாகக் கிடைக்கிறது. இதனால் எங்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசின் ஆறுகள் இணைப்பு திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் கர்நாடக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x