Published : 20 Jul 2021 01:46 PM
Last Updated : 20 Jul 2021 01:46 PM

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், பொதுச் சொத்துகள் ஆக்கிரமிப்பு; மீட்க உரிய நடவடிக்கை: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

தருமபுரி மாவட்டத்தில் நீர் நிலைகள் மற்றும் பொதுச் சொத்துகள் மீட்கப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு விரிவான பதில் மனுவை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் ஆ.ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், கோயில் மற்றும் பொதுச் சொத்துகள் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், பாப்பாரப்பட்டியில் உள்ள அருள்மிகு அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பரம்பரை அறங்காவலர்களான 5 பேரின் துணையுடன் கோவில் சொத்துகளைத் தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளது குறித்து தமிழக அரசு, இந்துசமய அறநிலையத்துறை உள்ளிட்டோரிடம் 2014ஆம் ஆண்டு முதல் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, இன்று (ஜூலை 22) முதல் 3 நாட்களுக்கு அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலின் நிலங்கள் அளவிடும் பணிகள் நடத்தப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.

அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், நில அளவையில் ஈடுபடும் அதிகாரிகளுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கும்படி பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தினருக்கு அறிவுறுத்தும்படி, மேற்கு மண்டல ஐ.ஜி.க்கு உத்தரவிட்டனர்.

மேலும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் பொதுச் சொத்துகளை மீட்பதற்காக ஒருங்கிணைந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டியுள்ளதாகக் கூறி, இந்த வழக்கில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, பொதுப் பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைச் செயலாளர்களையும், பேரூராட்சிகளின் இயக்குநரையும் எதிர்மனுதாரர்களாகச் சேர்த்ததுடன், வழக்கு குறித்து அவர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 27ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x