Published : 20 Jul 2021 12:25 PM
Last Updated : 20 Jul 2021 12:25 PM

ஆசிரியர் ராஜகோபாலன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மனைவி வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை

மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்பில் அரைகுறை ஆடையுடன் வந்து மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி அளித்த புகாரில் சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினரால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, ஜூன் 24ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

ராஜாகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி ஆர்.சுதா உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “மே 24ஆம் தேதி முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரில் இந்திய தண்டனைச் சட்டம், போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழ் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவி அளித்த புகாரில் 2015ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம் எனக் குறிப்பிட்டுள்ளார். அப்போது ஆன்லைன் வகுப்புகளே இல்லாத நிலையில் பொய்யான குற்றச்சாட்டு இது. அதன்பின்னர் எவ்வித வழக்குகளும் இல்லாத நிலையில், என் கணவரைப் பாலியல் குற்றவாளி என குண்டர் சட்டத்தில் அடைத்தது சட்டவிரோதம்.

தாமதமாக அளிக்கப்பட்ட புகாரில், முழுமையாக உண்மையைக் கண்டறியாமல் செவி வழித் தகவலின் அடிப்படையில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பெண்களைத் துன்புறுத்தியதாகவும், பெண்ணினத்தின் கண்ணியத்தைக் கெடுப்பதாகவும், போக்சோ குற்றம் எனவும் கூறும் குற்றச்சாட்டுகள் தெளிவற்றதாக உள்ளன.

ஜூன் 24 குண்டர் சட்டத்தில் கைது செய்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் தங்களுக்கு வழங்கியதில் தாமதிக்கப்பட்டு, ஜூலை 5ஆம் தேதிதான் வழங்கப்பட்டது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அன்றே ஆவணங்களை வழங்காதது சட்டவிரோதம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து தமிழக அரசு உள்துறைச் செயலாளர், சென்னை மாநகரக் காவல் ஆணையர், புழல் சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் அமர்வு விசாரணையைத் தள்ளிவைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x