Published : 20 Jul 2021 11:30 AM
Last Updated : 20 Jul 2021 11:30 AM
சென்னை ஐஐடியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே நிலவி வரும் சாதி, மத வேறுபாடுகளால் உயர்கல்வியின் தரம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, மத்திய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன என்று மத்தியக் கல்வி அமைச்சர், தர்மேந்திர பிரதானிடம் திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். இதற்கு தர்மேந்திர பிரதான் பதிலளித்தார்.
இதுகுறித்து டி.ஆர் பாலு அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
“இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி) சென்னை விடுதியில் 2019ஆம் ஆண்டில் பாத்திமாவின் தற்கொலையைத் தொடர்ந்து, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே நிலவி வரும் சாதி, மத வேறுபாடுகளால் உயர்கல்வியின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகள் தொடரும் நிலையில், துணைப் பேராசிரியர்கள் பதவி விலகி வருவதைத் தடுக்க ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா? என்று விரிவான கேள்வியை டி.ஆர்.பாலு எழுப்பினார்.
இதற்கு மத்தியக் கல்வி அமைச்சர், தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், சென்னையில் சாதி, மத வேறுபாடுகளைக் களைய அதுசார்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், புதிய மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் மனநிலையைச் சீர்செய்யத் தேவையான மனநல மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும், தொழில்நுட்ப நிறுவனங்கள் சட்டம், 1961-ன்படி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே எந்த சாதி, மத வேறுபாடுகளும் பின்பற்றப்படுவதில்லை என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT