Published : 20 Jul 2021 03:15 AM
Last Updated : 20 Jul 2021 03:15 AM
வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 42,262 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெறுவதாக இருந்தது. அப்போது, கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் உச்சத்தில் இருந்ததால் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதுடன், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், பிளஸ் 2 மதிப்பெண்ணை தசம முறையில் வெளியிட முடிவானது.
இதில், மாணவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களில் பெற்ற மதிப்பெண் களில் 50 சதவீதம், பிளஸ் 1 பொதுத் தேர்வில் அனைத்துப் பாடங்களின் மதிப்பெண்களில் 20 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் மதிப்பெண்கள் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு மதிப்பெண்கள் பட்டியலுடன் கூடிய முடிவு நேற்று வெளியிடப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் 71 அரசு மேல்நிலைப்பள்ளி, 13 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, 54 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் என மொத்தம் 138 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 15,009 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், மாணவர்கள் 6,978 பேர், மாணவிகள் 8,031 பேர்.
இதுகுறித்து, வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் கூறும்போது, ‘‘பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான நிலையில் வேலூர் மாவட்டத்தில் அனைத்து மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிகளில் மாணவர்கள் நேரடியாக சென்று பிளஸ் 2 தேர்வில் எடுத்துள்ள மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். வருகிற 22-ம் தேதி முதல் இணையதளத்தில் மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக, பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ‘நீட்' தேர்வு எழுது வதற்காக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்கலாம். வேலூர் மாவட்டத்தில் 32 பேர் ‘நீட்'தேர்வு எழுத சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அவர் கள் ‘நீட்' தேர்வில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது’’ என்றார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6,353 மாணவர்கள், 7,321 மாணவிகள் என மொத்தம் 13,674 பேர் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர், வாணியம்பாடி கல்வி மாவட்டங்களில் இருந்து 130 பள்ளிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்து 507 மாணவர்கள், 7 ஆயிரத்து 72 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 579 பேர் 12-ம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில், விண்ணப்பித்த அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் 22-ம் தேதி காலை 11 மணி முதல் இணைய தளம் வாயிலாக தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment