Published : 19 Jul 2021 10:36 PM
Last Updated : 19 Jul 2021 10:36 PM
கட்டிட அனுமதிக்கு ஒற்றை சாளர முறையை பின்பற்ற திட்டமிட்டுள்ளதாகவும், வீடுகள் ஒதுக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பிட்ட காலத்துக்குள் பத்திரப்பதிவு செய்து கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில், தமிழக வீட்டுவசதித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (ஜூலை 19)நடந்தது.
தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், மாவட்டத்தில் வீட்டுவசதித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்து, பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் உத்தரவிட்டார்.
துணை நகரங்கள்
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது: எந்தெந்த பணிகளில் மாற்றம் செய்ய வேண்டும், துரிதப்படுத்த வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுடனான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், துணை நகரங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளில் துணை நகரங்கள் அமைப்பது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நகரங்கள், மாதிரி நகரங்களாக அமைய வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம். திருச்செங்கோடு, நாமக்கல், பெருந்துறை ஆகிய பகுதிகளில் அதிகமான லாரிகள் இருப்பதால், அங்குள்ள லாரி உரிமையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அங்கு ஆட்டோ நகரங்களை உருவாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஒற்றை சாளர முறையில் அனுமதி
தமிழக வீட்டுவசதித்துறையின் சார்பில், ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பத்திரப்பதிவு செய்யப்படாமல் உள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் பத்திரப்பதிவு செய்து கொடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இத்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள
கட்டிடங்களில், பழுதடைந்துள்ள கட்டிடங்களுக்கு பதிலாக மாற்றுக் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கட்டிட அனுமதிக்கு ஒற்றை சாளர முறை கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக பிரத்யேக மென்பொருள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி, கட்டிட அனுமதி கோப்புகள் மீது 60 நாட்களுக்குள் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விதிகளை மீறி, எவ்வித கட்டிடங்களும் கட்ட இனி அனுமதி கிடையாது. வரைபடத்தில் உள்ளது போல் தான் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்படும்.
இதனைக் கண்காணிக்க பறக்கும்படைகள் அமைத்து கண்காணிக்கப்படும். கோவை மாஸ்டர் பிளான் 1,211 சதுர கிலோ மீட்டராக உள்ள நிலையில், கூடுதலாக ஆயிரத்து 558 சதுர கிலோ மீட்டர்கள் சேர்க்கப்பட உள்ளன. புதிய மாஸ்டர் பிளான் ஒன்றரை ஆண்டுகளில் வெளியிடப்படும். கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத்தில் தவறுகள் நடந்திருந்தால் அது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
குடியிருப்பு ஆய்வு
இந்நிகழ்வின் போது, வீட்டுவசதித்துறை அரசு முதன்மைச் செயலர் ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநர் சுன்ஜோங்கம் ஜடக், குடிசைப்பகுதி மாற்று வாரிய இணைய மேலாண் இயக்குநர் இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT