Published : 19 Jul 2021 10:26 PM
Last Updated : 19 Jul 2021 10:26 PM

நீட் தேர்வு விஷயத்தில் ஏமாற்றியது யார் என்பது மக்களுக்கு தெரியும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

நீட் தேர்வு விஷயத்தில் மக்களை ஏமாற்றியது யார் என்பது மக்களுக்குத் தெரியும். ஏமாந்தது யார் என்பதும் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஏமாற்றிக்கொண்டிருப்பவர்கள் யார் என்றும் மக்களுக்குத் தெரியும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

நீட் தேர்வு விஷயத்தில் மக்களை ஏமாற்றியது யார் என்பது மக்களுக்குத் தெரியும். ஏமாந்தது யார் என்பதும் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஏமாற்றிக்கொண்டிருப்பவர்கள் யார் என்றும் மக்களுக்குத் தெரியும்

2011ஆம் ஆண்டு மத்திய அரசின் நிர்வாகத்தில் இருந்தது காங்கிரஸ் கட்சி. அதனோடு தோழமையில் இருந்தது திமுகதான். ஆனால் நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்று மத்திய அரசிடம் விலக்கு கேட்டுப்பெற்று 2011ஆம் ஆண்டு மே மாதம் வரை நீட் தேர்வு தமிழகத்தில் இல்லை.

அதற்குப் பிறகு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், அவர் உயிருடன் இருந்தபோதும் தமிழகத்தில் நீட் தேர்வு நுழையவில்லை. அதற்கு பிறகு 2017ஆம் ஆண்டு எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக நீட் தேர்விற்குற்கு சிம்மாசனம் போட்டு, சிவப்பு கம்பளம் விரித்தது எடப்பாடி பழனிசாமிதான். நீட் தேர்வின் விளைவால் 13 மாணவர்கள் இறந்திருக்கிறார்கள்.

அப்போதுகூட தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டு, அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. அதை குடியரசுத் தலைவர் நிராகரித்து, உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு அதை நிராகரித்த செய்தியையே சட்டப்பேரவையில் தெரிவிக்காமல் இருந்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு.

கிராமப்புற மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டில் 10 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வேண்டுமென்று திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதையும்கூட 7.5 சதவிகிதம் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி அது எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் கிடப்பில் கிடந்தது.
முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே இந்தச் சட்டத்தையாவது நிறைவேற்றவில்லையென்றால், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து, போராட்டம் நடத்திய அடுத்த நாள்தான் அந்த 7.5 சதவிகித இடஒதுக்கீடு ஆளுநரால் கையெழுத்திட்டு நிறைவேற்றப்பட்டது.

இதையெல்லாம் மறைத்துவிட்டு, மக்கள் மறந்து இருப்பார்கள் என்று நினைத்து பேசலாம், ஆனால் நீட் தேர்வு தமிழகத்திற்கு வருவதற்கு முழுக் காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமிதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x