Last Updated : 11 Feb, 2016 02:46 PM

 

Published : 11 Feb 2016 02:46 PM
Last Updated : 11 Feb 2016 02:46 PM

வேட்பாளரை அறிவித்தது பகுஜன் சமாஜ் கட்சி: திருநெல்வேலி தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கியது

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை அறிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கிறது.

தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் கடந்த 2011 சட்டப் பேரவை தேர்தலிலும், 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்டது. மற்ற கட்சிகளோ கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது, தேர்தல் அறிக்கை வெளியிடுவது என்றெல்லாம் பல்வேறு நிலைகளை கடந்து வருமுன்னேரே வேட்பாளர்களை களமிறக்குவதை பகுஜன் சமாஜ் கட்சி வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

வாக்கு சேகரிப்பு

இம்முறையும் அவ்வாறே தமிழகத்தின் பல்வேறு சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேட்பாளர்களை அக்கட்சி வாக்கு சேகரிப்பில் களமிறக்கிவிட்டிருக்கிறது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளிவருவதற்கு முன்னரே வேட்பாளர்கள் தங்களுக்கு செல்வாக்குள்ள பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, அதன் மாவட்டத் தலைவர் டி.தேவேந்திரன் களமிறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். திருநெல்வேலி மாநகராட்சி, மானூர் பகுதிகளில் யானை சின்னத்துக்கு வாக்கு கேட்டு, மாயாவதி உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்களுடன் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருக்கின்றன.

காத்திருப்பதில்லை

வேட்பாளர் தேவேந்திரன் கூறும்போது, ‘ஜாதி கலவரங்கள் இல்லாத நிலையை உருவாக்குவது, பேட்டை நூற்பாலையை மீண்டும் திறப்பது, மானூர் பகுதியில் மதிகெட்டான் அணையை புனரமைப்பது உள்ளிட்ட இப்பகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முன்னிறுத்தி கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளேன்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரே தேர்தல் பணிகளை தொடங்கியிருக்கிறோம். தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டும்போது கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் மற்றும் மாநில நிர்வாகிகள் பலரும் திருநெல்வேலியில் பிரச்சாரத்துக்கு வரவுள்ளனர். மற்ற கட்சிகளைப்போல் கூட்டணிக்காகவோ, தொகுதி பங்கீட்டுக்காகவோ நாங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. எனவேதான் முன்கூட்டியே தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டோம்’ என்றார் அவர்.

6 ஆயிரம் வாக்கு

கடந்த 2011- சட்டப் பேரவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்த தேவேந்திரன் ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தார். இதுபோல் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு 6 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x