Published : 19 Jul 2021 05:57 PM
Last Updated : 19 Jul 2021 05:57 PM
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் கடந்த 20 நாட்களாக மாநகராட்சி நிர்வாகம், குப்பைகளை அள்ளாததால் 5 டன் குப்பைகள் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றன. அதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு மார்க்கெட்டிற்கு வரும் வியாபாரிகள், பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணியில் தென் தமிழகத்தின் முக்கியமான பூ மார்க்கெட் உள்ளது. இங்கு 104 கடைகள் உள்ளன. கரோனாவுக்கு முன் வரை ஒரு நாளைக்கு 100 டன் பூக்கள் விற்பனைக்கு வந்தன. தற்போது 50 டன் பூக்கள் வருகின்றன. ரோஜா, மல்லிகை, ஆஸ்டர், ஜெர்பரா, செவ்வந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் அதிக அளவு இங்கு விற்பனைக்கு வருகின்றன.
வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் என தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மார்க்கெட்டிற்கு வந்து சென்றனர். தற்போது கரோனா தொற்றால் 3 ஆயிரம் பேர் வரை மட்டுமே வந்து செல்கின்றனர். பூ வியாபாரத்தில் ஏராளமான பூக்களின் கழிவுகள், மற்ற வகைக் கழிவுகள் என தினமும் சுமார் ஒரு டன் குப்பைகள் வெளியேறுகின்றன. இந்தக் குப்பைகளை மாநகராட்சிப் பணியாளர்கள் தினமும் அப்புறப்படுத்த வேண்டும். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக மார்க்கெட்டில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குப்பைகளை அள்ள வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 20 நாட்களாகத் தொடர்ந்து குப்பைகளை எடுக்க வராததால் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் 5 டன் குப்பைகள் தேங்கிக் காணப்படுகின்றன. மழையிலும், வெயிலிலும் இந்தக் குப்பைகள் மக்கி தூர்நாற்றம் வீசத் தொடங்கியிருக்கின்றன. அதனால், மார்க்கெட்டுக்கு வருவோர் முகம் சுளித்துக்கொண்டே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பூ மார்க்கெட் சங்கத் தலைவர் சோ.ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘குப்பைகளை அகற்றாததால் மார்க்கெட்டுக்கு வரும் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரையில் தற்போது சத்தமில்லாமல் டெங்கு பரவிக் கொண்டிருக்கிறது. குப்பைகளில் மழைநீர் தேங்கினால் டெங்கு கொசுக்கள் அதிக அளவு உற்பத்தியாக வாய்ப்புள்ளது. பலமுறை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கூறிவிட்டோம். ஒவ்வொரு முறையும் நாங்கள் சொல்லிச் சொல்லித்தான் அவர்கள் குப்பைகளை அள்ள வருகிறார்கள். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளரைச் சந்தித்து நேரடியாக முறையிட உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT