Published : 19 Jul 2021 05:19 PM
Last Updated : 19 Jul 2021 05:19 PM
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக புகார் கூறப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கக் கோரி திமுக எம்.பி., ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. அதில், வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக் கூறப்பட்டது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், டெண்டர்கள் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கணக்குத் தணிக்கை துறை அறிக்கை அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி, தேவைப்பட்டால் வழக்குப் பதிவு செய்யப்படும் எனக் கூறி, எட்டு வார கால அவகாசம் கோரினார்.
வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கணக்கு தணிக்கைக் குழு அறிக்கை குறித்து விளக்கமளிக்க அவகாசம் கோரினார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2-வது வாரத்துக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், முழுமையாக விசாரணை நடத்தி, தவறு செய்ததாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT