Published : 19 Jul 2021 05:03 PM
Last Updated : 19 Jul 2021 05:03 PM
புதுச்சேரி நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வாய்ப்பில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதன் மூலம் அவர் வெளியிட்டதேர்தல் அறிக்கையில் பொய் வாக்குறுதி அளித்தது உறுதியாகியுள்ளது என்று புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
”நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மார்ச் மாத இறுதியில் புதுச்சேரி மாநில பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தன. அதில் ஒன்றாக, புதுச்சேரிக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்குவதுபோல் 25 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக உயர்த்துவதாகவும் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் நடைபெற்றுவரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் புதுச்சேரிக்கான நிதி ஆதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாகப் புதுச்சேரியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நான் 19.07.2021 அன்று கேள்வி எழுப்பியிருந்தேன்.
அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், " 2021-2022க்கு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 2020 அக்டோபர் மாதமே முடிவு செய்யப்பட்டது. எனவே, புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வாய்ப்பில்லை" என்று பதில் அளித்துள்ளார்.
தற்போது இந்த பதில் அளித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, கடந்த மார்ச் மாதம் தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது தெரியாதா? ஆனால் உண்மையில் தெரிந்திருந்தும்தான் மக்களை ஏமாற்றி வாக்கு பெற வேண்டும் என்பதற்காகவே அவ்வாறான பொய் வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் சேர்த்துக் கொடுக்கச் செய்துள்ளார். தற்போது முதல் பொய் வாக்குறுதி வெளிவந்துள்ளது. இதுபோல் தொடர்ந்து பாஜகவின் அனைத்துப் பொய் வாக்குறுதிகளும் வெளி வரும்".
இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT