Last Updated : 04 Jun, 2014 10:49 AM

 

Published : 04 Jun 2014 10:49 AM
Last Updated : 04 Jun 2014 10:49 AM

தடை விதிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகள்: கடைகளில் தாராளமாக விற்பனை

உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 (நாளை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அரசு தடை விதித்துள்ள பிளாஸ்டிக் பைகள் அனைத்து விற்பனை நிலையங்களிலும் தாராளமாக விற்கப்படுகின்றன. ஆபத்தை அறியாமல் அதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மனிதனின் வாழ்க்கை முறையால் பல சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஏற்படுகின் றன. அதில் முக்கியமானது பிளாஸ்டிக் உபயோகம். ஒவ்வொராண்டும் உலகில் 50 ஆயிரம் கோடி பிளாஸ்டிக் பைகள் விற்பனையாகின்றன. பிளாஸ்டிக் பயன்பாடு வெறும் 20 நிமிடங்கள்தான். ஆனால், ஆயிரம் ஆண்டுகளானாலும் அவை அழிவதில்லை.

அதனால், பிளாஸ்டிக் பைகளை கடைகளில் விற்பதற்கு தடை விதித்துள்ள தமிழக அரசு, அதற்குப் பதிலாக காகிதம், சணல், துணியில் செய்யப்பட்ட பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. அதற்காக அவ்வப்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. ஆனால், நடைமுறை தலைகீழாக இருக்கிறது.

கடைகளில் பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கும் பொருட்களை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் பைகள் வேண்டும் என்று கேட்டால் கண்டிப்பாக தரக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை கடைகளில் இலவசமாக தரப்பட்ட பிளாஸ்டிக் பைகள், இப்போது பெரும்பாலான கடைகளில் மறைத்து வைத்து காசுக்காக விற்கப்படுகின்றன.

சென்னையில் மறுசுழற்சி செய்ய முடியாத 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவான மெல்லிய பிளாஸ்டிக் பைகள் அதிகளவில் உபயோகிக்கப்படுவதால் பல வழிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் அது அடைபட்டு கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மண்ணில் புதையும் பிளாஸ்டிக் பைகள் மழைநீர் பூமிக்குள் செல்வதைத் தடுத்து, நீர் நிலைகளை மாசுபடுத்துகின்றன.

இதுகுறித்து “தேவை” என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ கூறியதாவது:

பிளாஸ்டிக் பைகளை எரிக்கும்போது ஏற்படும் புகையால் மனிதனுக்கு சுவாசக் கோளாறு, பாலினக் குறைபாடு, புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ள போதிலும் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை நின்றபாடில்லை. சென்னையில் குப்பையில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்து வழங்கும் பொதுமக்களை ஊக்குவிக்க ஒரு கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் கழிவுகளை சென்னை மாநகராட்சியில் வழங்குவோருக்கு டோக்கன் கொடுத்து, குலுக்கல் முறையில் ஒவ்வொரு வார்டிலும் முதல் பரிசாக அரை கிராம் தங்க நாணயமும், ஆறுதல் பரிசாக 5 பேருக்குக்கு கைக்கடிகாரங்களும் வழங்கும் திட்டம் 1-9-2013 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மாநகராட்சி அறிவித்தது. ஆனால், இத்திட்டம் தற்போது நடைமுறையில் இல்லை என்றார் இளங்கோ.

இதுபற்றி சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) டி.ஆனந்திடம் கேட்டபோது, “பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என்று பொதுமக்களிடம் விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்காக பரீட்சார்த்த அடிப்படையில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, 3 மாதங்கள் வரை நடைமுறைப்படுத்தப்பட்டது. இனி வரும் காலத்திலும் இத்திட்டம் தொடர வேண்டும் என்று மாமன்றம் முடிவெடுத்தால் தொடர்ந்து நடத்தப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x