Last Updated : 19 Jul, 2021 03:13 AM

 

Published : 19 Jul 2021 03:13 AM
Last Updated : 19 Jul 2021 03:13 AM

வருவாய் குறைவால் வரிகளை உயர்த்தும் அவலம்; புதுவை அரசு இடங்களுக்கு 40 ஆண்டுகள் வரை வாடகை பாக்கி: அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?

ஆளுநர் மாளிகை - சட்டப்பேரவை அருகே 40 ஆண்டுகளாக வாடகை தராத 'சர்க்கிள் டி பாண்டிச்சேரி' கட்டிடம். படங்கள்: எம். சாம்ராஜ்

புதுச்சேரி

வருவாய் குறைவால் புதுச்சேரி அரசு வரிகளை உயர்த்தி வருகிறது. கரோனா காலத்தில் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்பட்ட வரியை குறைக்கவில்லை. மதுவுக்கான கரோனா வரியை குறைத்து எம்ஆர்பியை விட கூடுதலாக 20 சதவீதத்தை அதிகரித்துள்ளது. அதேபோல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறுவரிகளும் தொடர்கிறது. அதே நேரத்தில் அரசுக்கு வருவாய் வரக்கூடிய பல கட்டிடங்களை வாடகைக்கு விட்டுள்ள துறைகள் 40 ஆண்டுகள் வரை வாடகையை வசூலிக்கா மலும், கண்டுகொள்ளாமலும் இருப்பது தகவல்அறியும் உரிமைச்சட்டத்தில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக ஆர்டிஐ மூலம் தகவல் பெற்ற ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி கூறியதாவது:

புதுச்சேரி நகராட்சிக்கு சொந்தமான அண்ணா திடலின் வடக்குப்புறம் 26,695 சதுரடி பரப்பளவில் 'சர்க்கிள் தி ஸ்போர்ட்ஸ் பாண்டிச்சேரின்' என்ற விளையாட்டு சங்க அலுவலகம் ரூ.200 மாத வாடகையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி முதல் இவ்விடத்துக்கு நகராட்சியினர் ஆண்டு வாடகையை ரூ.31,144 ஆக உயர்த்தி அறிவித்தனர். வாடகை உயர்த்தியது முதல் கடந்த 20 ஆண்டுகளாக எந்த வாடகையும் செலுத்தாமல் உள்ளனர்.

இந்நிலையில் அண்ணா திடலை ரூ.8.9 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு அரங்கமாக மாற்ற ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி கடந்த ஜனவரி 13-ம் தேதி பூமி பூஜை போடப்பட்டது. அண்ணா திடலை சுற்றியுள்ள கடைகள் அகற்றப்பட்டு பணிகள் துவங்கின. இந்த விளையாட்டு சங்க அலுவலகத்தை சேர்த்து விளையாட்டு அரங்கு அமைக்க நடவடிக்கை எடுக்காமல், அலுவலகத்திற்கு மட்டும் லப்போர்த் வீதியில் தனி வழி அமைத்து அப்படியே விட்டுவிட்டனர். இது தவறானதாகும். கடந்த 20 ஆண்டுகளாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாத நிலையிலும் இந்த சங்க அலுவலகத்தை அரசு கையப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. குறைந்த வாடகை பாக்கியே ரூ.6.22 லட்சத்தை தொட்டுள்ளது.

இதேபோல் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வடக்குப்புறம் 48,987 சதுரடி பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் 'சர்க்கிள் டி பாண்டிச்சேரி'க்கு தரப்பட்டுள் ளது. கடந்த 1938-ல் சமூக கலாச்சார முன்னேற்ற ஆலோசனைக்காக இவ்வமைப்பு தொடங்கப்பட்டது.

புதுச்சேரி சட்டமன்றம் - ஆளுநர் மாளிகை பக்கத்தில் மதுபான விற்பனையுடன் கூடிய மனமகிழ் மன்றம் 1978-ம் ஆண்டு முதல் அரசுக்கு வாடகை செலுத்தவில்லை என்பது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.1978-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை மாத வாடகை ரூ.1,250 என இருந்தும் வாடகை பாக்கி ரூ.6,40,726. அதன் பிறகு வாடகை ரூ.3,238 என உயர்த்தியும் இதுவரை ஒரு ரூபாய் கட்டவில்லை.

சாதாரண மக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், இதுபோல் நகரின் முக்கியப் பகுதியிலுள்ள கட்டிடங்கள் வாடகை செலுத்தாதது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் உண்மையில் பல கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆளுநர், முதல்வர் நடவடிக்கை எடுத்து, கட்டிடங்களை அரசே கையகப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x