Published : 11 Feb 2016 08:22 AM
Last Updated : 11 Feb 2016 08:22 AM
மகாமகப் பெருவிழாவையொட்டி தமிழகம் முழுவதிலுமிருந்து 1,200 தீயணைப்பு வீரர்கள் கும்பகோணத்துக்கு வருகின்றனர்.
வரும் 13-ம் தேதி தொடங்கும் மகாமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி 22-ம் தேதி நடைபெறுகிறது. சுமார் 40 லட்சம் பக்தர்கள் பங்கேற்க உள்ள இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அனைத்துத் துறையினரும் செய்து வருகின்றனர்.
தீயணைப்பு மற்றும் அவசரகால மீட்புத் துறையின் இயக்குநர் ரமேஷ் குடவாலா தலைமையில் 1,200 தீயணைப்பு வீரர்கள் மகாமகப் பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக, தமிழகத்தில் உள்ள 326 தீயணைப்பு நிலையங்களிலிருந்து 900 பேரும், பேரிடர் மீட்பு அவசரகால கமாண்டோ படையினர் 300 பேரும் வரும் 19-ம் தேதி கும்பகோணம் வருகின்றனர். மேலும், 27 தீயணைப்பு வாகனங்கள், 15 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 10 மோட்டார் சைக்கிள்கள், 2 அவசரகால ஊர்தி, ஒரு ரசாயன ஊர்தி ஆகியவை பாதுகாப்புப் பணிக்குப் பயன்படுத்தப்பட உள்ளன.
கும்பகோணம் மகாமக குளம், பொற்றாமரைக் குளம், காவிரி ஆற்றங்கரை, தற்காலிக பேருந்து நிலையங்கள், பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். விபத்து மற்றும் பேரிடர் மீட்பு தொடர்பாக கும்பகோணத்தில் தற்போது விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் 8 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளன. ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால், உடனடியாக 101 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் அளிக்கலாம். அருகில் உள்ள தீயணைப்புக் குழுவினர் அங்கு சென்று, உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபடுவர் என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மகாமகத்தையொட்டி வரும் 22-ம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கும்பகோணத்தில் உள்ள பள்ளிகளுக்கு வரும் 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விடுமுறை அளிப்பது தொடர்பாக, அந்தந்த பள்ளி நிர்வாகங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
பிஎஸ்என்எஸ் சார்பில் வை-பை வசதி
பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் மகாமக குளம் உள்ளிட்ட இடங்களில் புதிதாக செல்போன் கோபுரங்கள், 12 இடங்களில் தொலைத்தொடர்பு சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள் ளன. விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் தடையில்லா செல்போன் சேவை மற்றும் இணையதள சேவை வழங்குவதற்காக 3-ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘வை-பை ஹாட் ஸ்பாட்’ வசதி மூலம் செல்போன் மற்றும் லேப்டாப்களில் பிஎஸ்என்எல் வை-பை இணைப்பு மூலம் இணையதள வசதி பெறலாம். முதல் 15 நிமிடங்களுக்கு இலவசமாகவும், அதன் பிறகு ஆன்லைன் ரீசார்ஜ் அல்லது கூப்பன்கள் மூலம் இந்த வசதியை தொடர்ந்து பயன்படுத்தலாம். தொலைத்தொடர்பு பணியில் 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவன பொது மேலாளர் எஸ்.லீலாசங்கரி தெரிவித்துள்ளார்.
ஆட்டோ கட்டணம் நிர்ணயம்
கும்பகோணத்தில் தற் காலிக பேருந்து நிலை யங்கள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து மகாமக குளம் வரை செல்வதற்கான ஆட்டோ கட்டண விவரம்: நாகேஸ்வரன் ஐடிஐ - ரூ.45, வளையப்பேட்டை - ரூ. 50, அசூர் 45, கெ.நா.கருப்பூர் - ரூ.50, செட்டி மண்டபம் - ரூ. 40, நாட்டார் தலைப்பு -ரூ.40.
இதேபோல, ரயில் நிலை யத்திலிருந்து மகாமக குளம் செல்ல ரூ.25, மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மகாமக குளம் செல்ல ரூ.25, மருதாநல்லூரிலிருந்து மகாமக குளம் செல்ல ரூ.50 நிர்ண யிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித் தால் 1800 425 5430 என்ற தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம் என்று போக்குவரத்து துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்காலிக பேருந்து நிலையங்கள் தயார்
கும்பகோணம் புறவழிச் சாலையில் 7 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அங்கு பேருந்துகளை இயக்குவது தொடர்பாக நேற்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
100 இலவச பேருந்துகள்
முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து மகாமக குளம் வரை 100 இலவச பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மின் வாரிய பணிகள் நிறைவு
கும்பகோணத்தில் புதிதாக 250 டிரான்ஸ்பார்மர்கள், 780 மின் கம்பங்கள், துணை மின் நிலையம், மகாமக குளத்தை சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு மின் கம்பி பதிப்பது உள்ளிட்ட ரூ.5.42 கோடி மதிப்பிலான பணிகள் இன்று (பிப்ரவரி 11) நிறைவடைகின்றன. கும்பகோணத்தில் இன்று முதல் தடையில்லா மின்சாரம் வழங்க மின் வாரியத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மின்சாரப் பணிகளை கையாளும் பணியில் 720 பேர் ஈடுபட உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT