Published : 19 Jul 2021 03:14 AM
Last Updated : 19 Jul 2021 03:14 AM

போளூர் அருகே இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பம்; மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததாக எஸ்பி அறிவிப்பு: தந்தை, மகன் கைது

பாலசுந்தரம்.

திருவண்ணாமலை

போளூர் அருகே மணல் கடத்தல் சம்பவத்தில் காவல் துறையால் விரட்டி செல்லப்பட்டதில் இளைஞர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மண்டகொளத்தூர் மதுரா, பேட்டை தோப்பு கிராமத்தில் வசிப்பவர் தீபா(22). இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவரின் நிலத்தின் அருகே தனது கணவர் முரளி (31) உயிரிழந்து கிடப்பதாகவும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போளூர் காவல் நிலையத்தில் கடந்த 17-ம் தேதி காலை புகார் அளித்தார். அதன்பேரில், சந்தேக மரணம் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முரளியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, தீபாவிடம் 18-ம் தேதி (நேற்று) ஒப்படைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவ அலுவலர், முரளியின் உடலில் வெளிப்படையான காயம் இல்லை என்றும், மின்சாரம் பாய்ந்து முரளி உயிரிழந்திருக்கலாம் என கருத்து தெரிவித்திருந்தார். மேலும், முரளியின் மரணத்தின் சந்தேகத்தை உறுதி செய்வதற்காக, மின்சாரம் தாக்கி ஏற்பட்ட தடயத்தில் இருந்து சிலவற்றை சேகரித்து தடய அறிவியல் கூட பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து, பாலசுந்தரம் நிலத்தில் விசாரணை நடத்தப் பட்டது. அதில், அவரது விவசாய நிலத்தில் நெற்பயிர்களை சுற்றி சட்ட விரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், கடந்த 15-ம் தேதி இரவு 9 மணிக்கு, மின்வேலிக்கு பாலசுந்தரத்தின் மகன் சிவக்குமார் மின் இணைப்பு கொடுத்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர், மறுநாள் (16-ம் தேதி) காலை 6 மணிக்கு வந்து பார்த்தபோது மின்வேலியில் சிக்கி முரளி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர், தனது தந்தை பாலசுந்தரத்தை வர வழைத்து, முரளியின் உடலை உருட்டி சென்று, நிலத்தின் அருகே உள்ள செய்யாற்றில் தள்ளிவிட்டது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்த சந்தேக மரணம் வழக்கை மாற்றம் செய்து மரணத்தை ஏற்படுத்தும் குற்றம் செய்தல், தடயத்தை மறைத்தல் மற்றும் மின்சாரத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பாலசுந்தரம், அவரது மகன் சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மின்வேலி அமைப்பதற்காக பயன் படுத்தப்பட்ட கம்பிகள் மற்றும் மின்சார வயர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x