Published : 18 Jul 2021 07:28 PM
Last Updated : 18 Jul 2021 07:28 PM
ஆன்மிக தல்ங்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கவனம் செலுத்தி அந்தப் பகுதிகளில் உள்ள நபர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பபட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவ்து:
தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கரோனா தடுப்பூசிகள் விரைந்து செலுத்தப்பட்டு வருகிறது..
தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு அனைத்து கோணங்களிலும் கவனம் செலுத்தி சிறப்பான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
ஏற்ககெனவே மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் , வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வியாபாரிகள் என அனைவருக்கும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அடுத்த கட்டமாக ஆன்மீக தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கவனம் செலுத்தி அந்த பகுதிகளில் உள்ள நபர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பபட்டுள்ளது.
திருவண்ணாமலை, ராமேசுவரம், நாகூர், வேளாங்கன்னி மற்றும் சின்னமலை ஆகிய பகுதிகளில் வருகின்ற ஜூலை இறுதிக்குள் தடுப்பூசி செலுத்த மாவட்ட ஆட்சித்கலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்திற்கு கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1,80,31,670. இதில் செலுத்திய தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1,79,21,518. தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 4,76,880.
எதிர்க்கட்சி தலைவர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் 30 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தரப்பட்டதாகவும் மேலும் தடுப்பூசிகள் செலுத்துவதில் தொய்வு உள்ளதாகவும் உண்மைக்கு புறம்பான செய்தியை தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு 3 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. கடந்த ஆட்சி காலத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 61,000 தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டு வந்தது தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 1,61,297 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த குஷ்பு ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 5 லட்சம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளது என உண்மைக்குப் புறம்பான தகவலை தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் 3 லட்சத்திற்கும் மேலான அதாவது 6% தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தமிழக அரசானது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி தடுப்பூசிகளை கையாள்வது குறித்து சிறப்பானதொரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன் காரணமாகவும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் மிகச்சிறந்த கவனத்திற்குரிய பணியின் காரணமாகவும் சுமார் 7 லட்சம் தடுப்பூசிகள் கடந்த இரண்டு மாத காலத்தில் சேமிக்கப்பட்டுள்ளது.
ஒரு தடுப்பூசி குப்பியானது 5ml கொள்ளளவுடன் ஒரு நபருக்க 0.5ml என்ற அளவில் 10 நபர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் குப்பியின் முழு கொள்ளளவை பொறுத்து 5.8ml முதல் 6ml வரை கிடைக்கப்பெறுகிறது.
இதனை சரியான முறையில் பயன்படுத்தி பத்து நபர்கள் என்பது 11 அல்லது 12 நபர்களுக்கு வழங்கப்பட்டு கூடுதலான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கடந்த ஆட்சி காலத்தில் வீணடிக்கப்பட்ட சுமார் 3 லட்சம் தடுப்பூசிகளை சேர்த்து மொத்தம் 7 லட்சம் தடுப்பூசிகள் சேமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் தலைமையில் நடைபெற்ற காணொலிக்காட்சி வாயிலான கூட்டத்தில் ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தடுப்பூசி செலுத்துவதிலும், அவற்றை கையாள்வதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக பாராட்டுகளை தெரிவித்திருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் கரியாம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு குழந்தைகள் நல காப்பகத்தில் 43 குழந்தைகளுக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் எழிச்சூர் கோவிட் சிகிச்சை மையத்திலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
தற்போது அவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்கள் என்கின்ற ஒரு நல்ல செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த குழந்தைகள் பாதிப்படைந்தபொழுது அவர்களுக்கு டெல்டா பிளஸ் வகையிலான வைரஸ் தொற்று இருக்குமோ என அச்சப்பட்டு அவர்களின் தடவல் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பரிசோதனைகளின் முடிவில் குழந்தைகளுக்கு டெல்டா ப்ளஸ் வகை வைரஸ் தாக்கம் இல்லை என்பதும் அவர்கள் டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பபட்டிருந்தனர் என்பதும்தெரியவந்துள்ளது.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நியூமோ கோக்கைல் எனும் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 21 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் குழந்தைகளை நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் நியூமோ கோக்கைல் தடுப்பூசி செலுத்துவதற்கு கடந்த ஆட்சி காலத்தில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இத்தகைய தடுப்பூசியை பொதுமக்கள் குழந்தைகளுக்கு செலுத்திக் கொள்ள வேண்டிய நிலை இருந்தது. 5 வயதிற்குட்பட்ட ஒரு குழந்தைக்கு மூன்று தவணை இந்த தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியுள்ளது. ஒரு தவணை தடுப்பூசி குறைந்தபட்சம் நான்காயிரம் வீதம் ஒரு குழந்தைக்கு ரூபாய் 12,000 செலவழிக்க வேண்டிய நிலை இருந்தது.
தற்பொழுது முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட சுமார் 9.23 லட்சம் குழந்தைகளுக்கு நியூமோ கோக்கைல் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த வாரம் பூந்தமல்லியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
படிப்படியாக மாநிலத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நியூமோ கோக்கைல் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்ப்டும் .
இவ்வாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT