Last Updated : 18 Jul, 2021 04:52 PM

 

Published : 18 Jul 2021 04:52 PM
Last Updated : 18 Jul 2021 04:52 PM

கரோனா குறைந்தும் ஜிப்மரில் அதிகரிக்கப்படாத புறநோயாளிகள் சிகிச்சை: காத்திருக்கும் தமிழக,புதுச்சேரி மக்கள்

புதுச்சேரி

கரோனா குறைந்த நிலையிலும் ஜிப்மரில் ஒவ்வொரு துறையிலும் குறைந்த அளவிலான (ஒவ்வொரு துறையிலும் அதிகளவாக 25 பேர்) புறநோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை தரப்படுகிறது. இந்த எண்ணிக்கை முறைப்படி அதிகரிக்கப்படுமா என எதிர்பார்ப்பில் மக்கள் காத்துள்ளனர்

இவ்விஷயத்தில் ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி-தமிழக முதல்வர்களோ தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோருகின்றனர்.

புதுச்சேரி கோரிமேட்டில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள், பேராசிரியர்கள், மருத்துவ அதிகாரிகள் என 700 பேரும், செவிலியர்கள் 2,600 பேரும் பணிபுரிகின்றனர். இதுதவிர, டெக்னீஷியன்கள், நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

புதுவையில் கரோனா 2வது அலை பாதிப்பு அதிகமாக இருந்ததால் ஜிப்மர் கோவிட் வார்டில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக, கடந்த ஏப்ரல் 26ம் தேதி முதல் வெளிப்புற சிகிச்சை பிரிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பின்னர், கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது. இதையடுத்து, கடந்த ஜூன் 21ம் தேதி முதல் மீண்டும் வெளிப்புற சிகிச்சை பிரிவு ஜிப்மரில் செயல்பட தொடங்கியுள்ளது. அதுவும் நாளொன்றுக்கு ஒவ்வொரு துறையிலும் அதிகபட்சமாக 25 நோயாளிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக ஜிப்மர் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து, மருத்துவருடன் கலந்தாலோசனை செய்த பிறகுதான் நேரில் வரஅனுமதி வழங்கப்படுகிறது.

புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் பலரும் ஜிப்மரில் சிகிச்சை பெறுகின்றனர். ஏனெனில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மரில்

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள், வெளிப்புற சிகிச்சை, தீவிர சிகிச்சை, உயர் மருத்துவ சிகிச்சை, மகப்பேறு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் உள்ளன.

கரோனா தொற்று குறைந்தாலும் வெளிப்புறசிகிச்சைக்கு பல கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இதுபற்றி சிகிச்சைக்கு புதுச்சேரி, தமிழகத்தில் இருந்து வரும் ஏழை மக்கள் கூறியதாவது:

"கரோனா தொற்று காரணமாக கடந்த 15 மாதங்களுக்கு மேலாக வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு நோயாளிகள் நேரடியாக வந்து சிகிச்சை பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது. ஜிப்மர் இணையதளத்தில் துறை வாரியாக குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களில், தங்களுடைய பிரச்சினைகளுக்கான எண்ணில், நோயாளிகள் முதலில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்.

பிறகு மருத்துவர்களுடன் தொலைமருத்துவ கலந்தாலோசனை பெற வேண்டும். அப்போது மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு மட்டுமே வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வர அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறையால் கடந்த ஓராண்டாக நோயாளிகள் கடும் பாதிப்பில் உள்ளோம்.

தற்போது கரோனா தொற்று 2வது அலை குறைந்துள்ளது. ஜிப்மரில் மட்டும் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு தினமும் ஒவ்வொரு துறையிலும் அதிகளவாக 25 நோயாளிகளுக்கே சிகிச்சை அளிக்கப்படுகிறது. வெளிப்புற சிகிச்சைக்காக அனுமதி அளிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தவில்லை.

இதனால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் காலத்தோடு சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். வெளிப்புற சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க துணைநிலை ஆளுநரோ, தமிழக-புதுச்சேரி முதல்வர்களோ, எம்.பி.,க்களோ நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x