Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நவீன ரக ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கி கடற்படை வசம் ஒப்படைப்பு

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட கடற்படைக்கான நவீன ரக துப்பாக்கிகள்.

திருச்சி

திருச்சி நவல்பட்டில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட, கடற்படை கப்பல்களில் பயன்படுத்தக் கூடிய நவீன ரிமோட்கன்ட்ரோல் துப்பாக்கி நேற்று கடற்படை வசம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி நவல்பட்டில் உள்ளஇந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சொந்தமான துப்பாக்கித் தொழிற்சாலையில் பல்வேறு ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மாநில காவல்துறை உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் புதிய ரக எஸ்ஆர்சிஜி ரக துப்பாக்கி திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் எல்பிட் சிஸ்டம் என்ற நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட தொழில்நுட்ப பகிர்ந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இத்துப்பாக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் துப்பாக்கி 12.7 மி.மீ எம்2 நேட்டோ ரக துப்பாக்கியாகும். இந்த ரக துப்பாக்கியை இந்திய கடற்படை, கடலோரக் காவல்படை ஆகியவற்றின் ரோந்துக் கப்பல்களில் பயன்படுத்தலாம். பகல் மற்றும் இரவு நேரங்களில் இலக்கைத் துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும் வகையிலான நவீன சாதனங்கள் இந்தத் துப்பாக்கியில் உள்ளன.

இந்தத் துப்பாக்கி தானாகவேஇலக்கை தேடும் வசதி கொண்டது. மின்சாரம் இல்லாதபோதும்,தானியங்கி தொழில்நுட்பத்தில் பழுது ஏற்பட்டாலும் கைகளால்இயக்கும் வசதியும் கொண்டது.இந்த ரக துப்பாக்கி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, பயன்படுத்தப்படுவதால் இதற்காக இறக்குமதி செய்யும் செலவு குறையும்.

இந்தத் துப்பாக்கிகளை இந்திய கடற்படைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று துப்பாக்கித் தொழிற்சாலையில் நடைபெற்றது. படைக்கலன் தொழிற்சாலை வாரியத் தலைவர் சி.எஸ்.விஸ்வகர்மா இந்தத் துப்பாக்கிகளை இந்திய கடற்படை டைரக்டர் ஜெனரல் (ஆயுதப் பிரிவு) கே.எஸ்.சி.ஐயர் வசம் ஒப்படைத்தார். இந்நிகழ்வில் தொழிற்சாலை பொது மேலாளர் சஞ்சய் திவேதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இந்தத் துப்பாக்கிகள் நமதுரோந்துக் கப்பல்களில் பொருத்தப்படும்போது, நமது தேசத்தின் பாதுகாப்பு மேலும் பலப்படும் என துப்பாக்கித் தொழிற்சாலை அதிகாரிகள் கூறினர். முதல்கட்டமாக கடற்படைக்கு 15 துப்பாக்கிகளும், கடலோர காவல் படைக்கு 10 துப்பாக்கிகளும் ஒப்படைக்கப்பட்டுஉள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x