Last Updated : 16 Feb, 2016 09:05 AM

 

Published : 16 Feb 2016 09:05 AM
Last Updated : 16 Feb 2016 09:05 AM

மதுவிலக்கை வலியுறுத்தி சான்றிதழ்களை கிழித்தெறிந்த வாள்வீச்சு சாம்பியன்: லட்சியம் நசுக்கப்பட்டுவிட்டதாக வேதனை

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, தான் பெற்ற விளையாட்டுச் சான்றிதழ்களை மாநாட்டு மேடையிலேயே கிழித்தெறிந்தார் வாள்வீச்சில் தேசிய சாம்பியனான டேவிட் ராஜ்.

திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மக்கள் அதிகாரம் சார்பில், நேற்று முன்தினம் மது ஒழிப்பு சிறப்பு மாநாடு நடைபெற்றது.

மதுக்கடைகளை மூடச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மக்கள் அதிகாரம் அமைப்பு இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

மாநாட்டில், கன்னியாகுமரி மாவட்டம், தேமானூரைச் சேர்ந்தவரும், வாள்வீச்சில் தேசிய அளவில் 3 முறை சாம்பியன் பட்டம் பெற்றவருமான டேவிட் ராஜ் பேசிக்கொண்டிருந்தபோது, வாள்வீச்சில் பள்ளிப் பருவம் முதல் தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்றது வரையிலான தனது சான்றிதழ்களை மேடையிலேயே கிழித்தெறிந்தார்.

இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது: ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் எனது தந்தை தங்கசாமி. அவரது மதுப் பழக்கத்தால் நாங்கள் பல வழிகளில் பாதிக்கப்பட்டோம். எனவே, மதுவை ஒழிப்பதில் எனக்குள்ள பங்கை உணர்ந்தேன்.

பிளஸ் 1 வகுப்பிலிருந்து வாள்வீச்சில் ஈடுபட்டு வருகிறேன்.கல்லூரி 2-ம் ஆண்டு படித்தபோது திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வாள்வீச்சு தேசியப் போட்டியில் தங்கம் வென்றதால், ராணுவப் பணிக்கு தேர்வு பெற்றேன். வாள்வீச்சில் தமிழகத்தில் இருந்து ராணுவத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் நான். இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது.

ராணுவத்துக்கு தேர்வு செய்யப்பட்டதையடுத்து, புனேவில் உள்ள ராணுவ விளையாட்டு அகாடமியில் சுமார் 2 ஆண்டுகள் தங்கி வாள்வீச்சில் பயிற்சி பெற்றேன். இதனிடையே, எங்கள் வீட்டில் மதுவால் பிரச்சினை பெரிதானது. இதையடுத்து, அங்கிருந்து நான் ஊர் திரும்பினேன். உள்ளூரிலேயே ஒருபுறம் வாள்வீச்சு பயிற்சியிலும், மறுபுறம் மது ஒழிப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தேன்.

இந்தச் சூழலில் கடந்தாண்டு சசி பெருமாள் உண்ணாமலைகடை பகுதியில் மதுவிலக்கு போராட்டத்தில் ஈடுபட்டபோது நானும் பங்கேற்றேன். அந்தப் போராட்டத்தில் அவர் உயிரிழந்த 2-வது நாளில், ஆற்றூரில் உள்ள மதுக்கடைகளை மூட வலியுறுத்தி நானும் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டேன். அப்போது போலீஸார் என்னை தாக்கியதால் எனது இடதுகால் விலா எலும்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. முதுகு பகுதியிலும் 3 இடங்களில் எலும்பு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் முன்புபோல வாள்வீச்சில் வீரியமாகச் செயல்பட முடியவில்லை.

மதுவை ஒழிப்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டதால், எனது எதிர்காலம் பாழாகிவிட்டது. இதனால், வாள்வீச்சில் எனது 15 ஆண்டு கால உழைப்பு வீணாகிவிட்டது. எனது ஒலிம்பிக் லட்சியம் நசுக்கப்பட்டுவிட்டது.

வாள்வீச்சில் ஈடுபட முடியாத எனக்கு சான்றிதழ்கள் மட்டும் இருந்து என்ன பயன் ஏற்படப் போகிறது. மதுக்கடைகளை மூட எந்தத் தியாகம் செய்யவும் இளைஞர்கள் தயாராக உள்ளதை வெளிப்படுத்தும் நோக்கிலேயே மக்கள் மத்தியில் சான்றிதழ்களை கிழித்தெறிந்தேன். இதன்மூலம் மக்கள் விழிப்புணர்வு அடைந்து, ஒன்றிணைந்து போராடி மதுக்கடைகளை மூடச் செய்தாலே வாழ்க்கையில் நான் வெற்றி பெற்றதற்கு சமம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x