Published : 17 Jul 2021 05:08 PM
Last Updated : 17 Jul 2021 05:08 PM
கோவை வெள்ளக்கிணறு தடுப்பூசி செலுத்தும் மையத்தில் இன்று (ஜூலை 17) ஒலிபெருக்கி மூலம் ஒவ்வொரு டோக்கன் எண்ணையும் அறிவித்து, சுகாதாரத் துறையினர் வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.
கோவையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வழங்கப்படும் டோக்கன் விநியோகத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், ஒதுக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை அளவுக்கு டோக்கன்கள் பொதுமக்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்படுவதில்லை எனவும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் தங்களுக்கென சில டோக்கன்களைப் பெற்றுக்கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தும், டோக்கன் கிடைக்காததால் அதிகாரிகள், போலீஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் நடைபெற்று வந்தன.
இதனைத் தவிர்க்கும் விதமாக, கோவை வெள்ளக்கிணற்றில் உள்ள அரசுப் பள்ளியில் இன்று நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் முகாமில் ஒன்று முதல் 350 வரை வழங்கப்பட்ட டோக்கன் எண்களை வெளிப்படையாக அறிவித்து, வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சுகாதாரத் துறையினர் கூறும்போது, "பொதுமக்கள் நள்ளிரவு, அதிகாலை முதல் தடுப்பூசி மையங்கள் முன்பு காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, தடுப்பூசி கையிருப்பில் இருந்து செலுத்தப்படும் நாளன்று காலை 8 மணிக்கு மாவட்ட நிர்வாகத்தின் https://coimbatore.nic.in/ என்ற இணையதளம், https://twitter.com/collectorcbe ட்விட்டர் பக்கம், https://www.facebook.com/CollectorCoimbatore முகநூல் பக்கத்தில் எங்கெங்கு, எவ்வளவு தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்ற விவரம் வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. காலை 11 மணிக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT